இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் விளையாடும் இந்தியா மாஸ்டர்ஸ் அணி தங்களுடைய லீக் சுற்றில் இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தோற்கடித்தது. ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றாலும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியா மாஸ்டர்ஸ் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அடுத்ததாக மார்ச் 13ஆம் தேதி ராய்ப்பூரில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை இந்தியா மாஸ்டர்ஸ் எதிர்கொண்டது. இரவு 7 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு ராயுடு 5 ரன்களில் அவுட்டானார்.
சச்சின் க்ளாஸ் – யுவி மாஸ்:
மறுபுறம் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடன் இணைந்து அதிரடி காட்ட முயற்சித்த பவன் நெகி 14 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஜாம்பவான் யுவராஜ் சிங் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டு ஆஸ்திரேலியா பவுலர்களை அடித்து நொறுக்கினார்.
அவருடன் சேர்ந்து அசத்திய சச்சின் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரியுடன் 42 (30) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய யுவராஜ் வெறும் ஒரு பவுண்டரி 7 சிக்சர்களைப் பறக்க விட்டு அரை சதத்தை கடந்து 196 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 (30) ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அவர்களுக்கு அடுத்தபடியாக ஸ்டுவர்ட் பின்னி தனது பங்கிற்கு அதிரடியாக 36 (21) ரன்கள் விளாசினார்.
ஃபைனலில் இந்தியா:
அதே போல யூசுப் பதான் தமது ஸ்டைலில் முரட்டுத்தனமாக ஒரு பவுண்டரி 2 சிக்ஸருடன் 23 (10) ரன்களும் இர்பான் பதான் 10* 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 19* (7) ரன்களும் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் இந்தியா மாஸ்டர்ஸ் 220-7 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக சேவியர் டாத்ரி 2, டேன் கிறிஸ்டின் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு இத்தொடரில் 3 சதங்கள் அடித்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் ஷேன் வாட்சனை 5 ரன்களில் காலி செய்த வினய் குமார் மற்றொரு துவக்க வீரர் ஷான் மார்ஸை 21 ரன்களில் அவுட்டாக்கினார். அப்படியே கிறிஸ்டின் 2, நாதன் ரீட்டான் 21, கோல்டர்-நைல் 0 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் பென் கட்டிங் 39 (30) ரன்கள் எடுத்துப் போராடியும் 18.1 ஓவரில் 126 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா மாஸ்டர்ஸ் 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: இதான் இங்கிலாந்தின் வீக்னெஸ்.. வருணை டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறக்குனா 18 வருட வெற்றி நிச்சயம்.. சித்து பேட்டி
அதனால் ஆஸ்திரேலியாவை இத்தொடரிலிருந்து நாக் அவுட் செய்து வெளியேற்றிய இந்தியா லீக் சுற்றில் சந்தித்த படுதோல்விக்கு பழி தீர்த்தது. மேலும் சச்சின் தலைமையில் இத்தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதல் அணியாகவும் இந்தியா மாஸ்டர்ஸ் தகுதி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக சபாஷ் நதிம் 4, இர்பான் பதான் 2, வினய் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.



