ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்து அசத்தியது. அந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். குறிப்பாக செமி ஃபைனலில் இந்தியாவை பார்த்தாலே அடித்து நொறுக்கக் கூடிய ட்ராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே அவர் அவுட் செய்ததை மறக்க முடியாது.
2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து போராடிய அவர் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த வருடம் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து தொடர்களில் அசத்திய அவர் உள்ளூரிலும் தமிழ்நாட்டு அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் 18 விக்கெட்டுகளை எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வருண்:
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக பௌலிங் செய்த வருண் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் தேர்வான அவர் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டுள்ளார். மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரராகவும் சாதனை படைத்தார்.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். ஏனெனில் வருண் சக்கரவர்த்தியை போன்ற மர்மமான (மிஸ்ட்ரி) ஸ்பின்னரை இங்கிலாந்து அணியால் படிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு.
18 வருட காத்திருப்பு:
“மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியின் பலவீனம். அது இங்கிலாந்துக்கு வீங்கிய பதற்றமாக இருக்கும். நீங்கள் வருண் சக்கரவர்த்தியை விட்டுவிட்டு இங்கிலாந்து செல்ல முடியுமா? முடியாது. அவரை நீங்கள் வைத்து விளையாட வேண்டும் அல்லது குல்தீப் யாதவை வைத்து விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியால் அவர்களைப் படிக்க முடியாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா என்னை புரிந்துகொண்டதால் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது – வருண் சக்ரவர்த்தி மகிழ்ச்சி
கடைசியாக 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின் 18 வருடங்களாக அந்நாட்டில் ஒரு தொடரைக் கூட வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வருகிறது. எனவே தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் வருண் சக்கரவர்த்தியை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தி இங்கிலாந்து விளையாட வைத்தால் இந்தியா வெற்றி பெற பெரிய வாய்ப்புள்ளது.



