காமன்வெல்த் கேம்ஸ் 2022 : முதல் போட்டியில் ஆஸியிடம் போராடி தோற்ற இந்தியா, நாக்-அவுட் செல்ல செய்யவேண்டியது என்ன – முழுவிவரம்

IND vs Aus Womens Common Wealth Renukha Singh
- Advertisement -

உலகில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு அடுத்த படியான கௌரவத்தை கொண்டுள்ள காமன்வெல்த் போட்டிகள் 2022 தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 29ஆம் தேதி துவங்கியது. தடகளம், டென்னிஸ் உட்பட ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் ஏறக்குறைய அத்தனை விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல்முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் விளையாடப்பட்டது.

அதில் இந்தியா போன்ற முன்னணி அணிகள் பங்கேற்ற நிலையில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்க பதக்கம் வென்றது. அதன்பின் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் 24 வருடங்கள் கழித்து மகளிர் 20 ஓவர் போட்டிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் குரூப் ஏ மற்றும் பி ஆகிய இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா 1 போட்டியில் மோத வேண்டும் என்பதன் அடிப்படையிலான லீக் சுற்று போட்டிகள் இன்று துவங்கின.

- Advertisement -

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 5 பவுண்டரிகள் பறக்க விட்டாலும் 24 (17) ரன்களில் அவுட்டானார்.

அசத்திய ஹர்மன்:
இருப்பினும் அவருடன் களமிறங்கிய மற்றொரு இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட மறுபுறம் களமிறங்கிய யாஸ்டிக்கா பாட்டியா 8 (12) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் 9 பவுண்டரியுடன் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 48 (33) ரன்களில் அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவுட்டானார். ஆனால் அப்போது வந்த ஜெமிமா ரோட்ரிக்கஸ் 11 (12) தீப்தி சர்மா 1 (2) என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் 150 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் பொறுப்புடன் பேட்டிங் செய்த கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் 8 பவுண்டரி 1 சிக்சருடன் காமன்வெல்த் போட்டிகளில் அரை சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்து 52 (34) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதனால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 154/8 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோன்ஸ்ன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 155 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு பவர்பிளே ஓவர்களில் அனலாக பந்துவீசிய இந்திய வீராங்கனை ரேணுகா சிங் அலிசா ஹீலி 0, பெத் மூனி 10, மெக் லென்னிங் 8, தாஹிளா மெக்ராத் 14 என 4 டாப் ஆர்டர் வீராங்கனைகளை அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்து இந்தியாவுக்கு மிரட்டலான தொடக்கம் கொடுத்தார்.

- Advertisement -

போராடி தோல்வி:
போதாக்குறைக்கு ரிச்சல் ஹேன்ஸ் 9 ரன்களில் அவுட்டானதால் 49/5 என்ற மோசமான தொடக்கத்தை ஆஸ்திரேலியா பெற்றதால் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோயர் மிடில் நங்கூரத்தை போட்ட அஷ்லே கார்ட்னர் மேற்கொண்டு விக்கெட்டை சரிய விடாமல் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக 5 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட க்ரேஸ் ஹரிஷ் முக்கியமான 37 (20) ரன்களை வெளுத்து வாங்கி அவுட்டானார்.

இறுதியில் அலனா கிங் 3 பவுண்டரியுடன் 18* (16) ரன்கள் எடுக்க மறுபுறம் 9 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த கார்ட்னர் 52* (35) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்ததால் 19 ஓவரில் 157/7 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மறுபுறம் ரேணுகா சிங் 4 விக்கெட், தீப்தி சர்மா 2 விக்கெட் எடுத்து போராடினாலும் எஞ்சிய வீராங்கனைகள் கடைசி நேரத்தில் சொதப்பியதால் வழக்கம்போல ஆஸ்திரேலியாவிடம் அணி படிந்த இந்தியா நெஞ்சை உடைக்கும் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் விரிவாக்கம் சரி ஆனால் அதை மட்டும் செய்யாதீங்க – கோரிக்கையுடன் ஆஸி ஜாம்பவான் கேள்வி

நாக்-அவுட் செல்ல:
கடந்த 2020, 2022 உலகக் கோப்பை உட்பட வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியாவை 24 டி20 போட்டிகளில் சந்தித்த இந்தியா 17 தோல்விகளை சந்தித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த வெற்றியால் குரூப் ஏ புள்ளி பட்டியலில் எந்த புள்ளிகளையும் பெறாத இந்தியா இந்த காமன்வெல்த் போட்டிகளின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தன்னுடைய எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளது.

Advertisement