- Advertisement -
ஆசிய கோப்பை

ஆன்லைன் கேம்ஸ் தடையால் இந்திய அணியின் ஜெர்சியில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயிருக்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

இந்திய அணியின் ஜெர்சியில் ஏற்படவுள்ள மாற்றம் :

இந்த தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் செப்டம்பர் 4-ஆம் தேதி துபாய் நாட்டிற்கு புறப்பட காத்திருக்கிறது.

- Advertisement -

அப்படி துபாய் செல்லும் இந்திய அணி அங்கு ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் தங்கி சில நாட்கள் பயிற்சி பெற்றபிறகு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாட இருக்கிறது.

அதன்பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், அதன்பின்னர் ஓமன் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருந்து வந்த ட்ரீம் 11 பெயர் இம்முறை இந்திய அணி ஜெர்சியில் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் ஆன்லைன் கேம்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதன் காரணத்தினால் ஜெர்சி ஸ்பான்சராக இருந்து வந்த ட்ரீம் 11 நிர்வாகம் தங்களுடைய ஸ்பான்சர் ஷிப்பை முடித்துக் கொண்டது. இதன் காரணமாக அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை புதிய ஜெர்சி ஸ்பான்சரை பிசிசிஐ தேடி வருகிறது.

இதையும் படிங்க : 2018 ஆம் ஆண்டே ஓய்வுபெற திட்டமிட்ட முகமது ஷமியை தடுத்து நிறுத்தியது அவர்தான் – பரத் அருண் பேட்டி

தற்போதைக்கு ஜெர்சி ஸ்பான்சர் இல்லாததால் ஆசிய கோப்பை தொடரில் ஸ்பான்சரின் பெயரின்றி இந்திய அணியின் ஜெர்சி இருக்கும் என்றும் அதன்பிறகு புதிய ஸ்பான்சர் கிடைத்த பின்னர் ஜெர்சியில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 450 கோடி ரூபாய் அளவில் புதிய ஸ்பான்சருக்கான தேடல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -