இந்திய அணியின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 108 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 120 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நட்சத்திர அந்தஸ்துடன் பார்க்கப்படும் பவுலரான இவருக்கு காயம் ஒரு மிகப்பெரிய சறுக்கலை அவரது கரியரில் தந்தது.
முகமது ஷமியின் ஓய்வை தடுத்து நிறுத்தியவர் அவர்தான் : பரத் அருண்
ஆனாலும் அவ்வப்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியும் இருக்கிறார். கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்த முகமது ஷமி அதன் பின்னர் மீண்டும் காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் இணைய முடியாமல் தவித்து வருகிறார்.
இருப்பினும் நிச்சயம் வெகு விரைவில் அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது 34 வயதான முகமது ஷமி கடந்த 2018-ஆம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவு எடுத்ததாகவும், அதனை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக முகமது ஷமி ஷமி உடற்தகுதி தேர்வில் தோல்வியை சந்தித்தார். அதனால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய முடியாமல் போனது. அந்த நேரத்தில் அவரது குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் என்னிடம் வந்து :
நான் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் : கிரிக்கெட்டில் இருந்து வெளியேறிவிட்டு நீ என்ன செய்யப் போகிறாய்? இன்றுவரை நீ சாதித்தது எல்லாம் கிரிக்கெட்டால் தான் எனவே அதை விட்டு விடாதே என்று கூறினேன். மேலும் அவரை ரவி சாஸ்திரிடமும் அழைத்து சென்றேன்.
அப்போது ரவி சாஸ்திரி தான் அவரை தேற்றி மீண்டும் ஓய்வு முடிவை மாற்ற வைத்தார். அதிலும் குறிப்பாக ரவி சாஸ்திரி அவரிடம் : உனக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி அதை மனதில் வைத்துக் கொள்ளாதே கையில் இருக்கும் பந்தின் மூலம் உன் கோபத்தை காட்டு. அதை விடுத்து நீ ஏன் ஓய்வுபெற விரும்புகிறாய்? பந்துவீச்சில் உன்னுடைய முழு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்து என்று கூறினார்.
இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் நீக்கப்பட வாய்ப்பு – புதிய கேப்டன் யார்?
அதோடு அவரை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பினார். பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை மீண்டும் எட்டிய முகமது ஷமி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்து அதே முனைப்புடன் பந்துவீசியே வெற்றிகரமான பந்துவீச்சாளராகவும் மாறினார் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.



