சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் வரலாற்று முதல் முறையாக முழுவதுமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தனதாக்கி செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
குறிப்பாக ஆரம்பத்திலேயே வலுவான ஆஸ்திரேலியாவை 2/3 என்ற சரிவை சந்தித்தும் போராடி வீழ்த்திய இந்தியா பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டி வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக தோற்கடித்தது. அதே வேகத்தில் நியூசிலாந்தை ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து தோற்கடித்த இந்தியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வெறும் 238 ரன்கள் வைத்தே தெறிக்க விடும் பந்து வீச்சால் 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மிரட்டும் இந்தியா:
அதற்கிடையே வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலையில் நெதர்லாந்தை தவிர்த்து எஞ்சிய அணிகளை அசால்ட்டாக 300 – 400 ரன்கள் குவித்து அடித்து நொறுக்கி தோற்கடித்து வந்த தென்னாப்பிரிக்கா மட்டுமே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் 326 ரன்கள் குவித்த இந்தியா தங்களுடைய மிரட்டலான பந்து வீச்சால் தென்னாப்பிரிக்காவையும் வெறும் 83 ரன்களுக்கு சுருட்டி அனைவரையும் வியக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்தது. இது போக 2023 ஆசிய கோப்பை ஃபைனலிலும் இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டி வென்ற இந்தியா இந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் எதிரணிகளை எளிதாக ஆல் அவுட்டாக்கி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போதைய இந்திய அணியை பார்ப்பது தமக்கு 1980களில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸை நினைவுபடுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா நீண்ட தொலைவை கடந்து வந்துள்ளது. மேலும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட், ரோஹித், ராகுல் போன்ற அவர்களிடம் நிறைய மகத்தான வீரர்கள் இருக்கின்றனர்”
இதையும் படிங்க: இதே இலங்கைக்கு எதிரா அதை செஞ்ச.. ரோஹித்தை பாத்து கத்துக்கோங்க.. மேத்யூஸ் விவகாரத்தில் ஷாகிப்பை விளாசிய கைஃப்
“பந்து வீச்சு அம்சத்திலும் அவர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை 80களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நான் ஒப்பிடுவேன். இருப்பினும் வேகப்பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் யாருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நெருப்பாக செயல்பட்டார்கள். ஆனால் எதிரணியை ஒருதலைபட்சமாக அச்சுறுத்துவதிலும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதிலும் அவர்களுடன் இந்தியா ஒப்பிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.