
ஓமனில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2024 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி தங்களுடைய முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வீழ்த்தியது. அந்த நிலையில் இந்தியா தங்களுடைய மூன்றாவது லீக் போட்டியில் ஓமனை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
அக்டோபர் 23ஆம் தேதி இந்திய நேரப்படி 7 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜட்டிண்டர் 17, ஆமீர் கலீம் 13, கரண் சோனாவளே 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 33-3 என ஆரம்பத்திலேயே ஓமன் அணி தடுமாறியது.
அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய வாசிம் அலி 24 (28) ரன்களில் தமிழக வீரர் சாய் கிஷோர் சுழலில் அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்த விளையாடிய முஹம்மது நதிம் மெதுவாக பேட்டிங் செய்து 41 (48) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஹம்மத் மிர்சா அதிரடியாக விளையாடி 28* (15), சந்தீப் கௌட் 5* (2) ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.
அதனால் 20 ஓவரில் ஓமன் 140-5 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு ஆகிப் கான், ரசிக் சலாம், நிஷாந்த் சிந்து, ரமந்திப் சிங், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 141 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு அனுஜ் ராவத் 8 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 (15) ரன்கள் விளாசி அவுட்டானார்.
மிடில் ஆர்டரில் கேப்டன் திலக் வர்மா – ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதில் ஆயுஷ் படோனி 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 (21) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த நேஹல் வதேரா 1 ரன்னில் அவுட்டானாலும் ரமந்தீப் சிங் அதிரடியாக 13* (4) ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டன் யார்? – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு
அவருடன் திலக் வர்மா 36* (30) ரன்கள் எடுத்ததால் 15.2 ஓவரிலேயே ரன்கள் எடுத்த இந்தியா ஏ 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதனால் செமி ஃபைனலில் குரூப் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தானை அக்டோபர் 25ஆம் தேதி இந்தியா எதிர்கொள்கிறது.