
ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அடுத்தடுத்து தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் 134 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்த பந்து வீச்சில் கடைசி வரை போராடியும் பேட்டிங்கில் 150 ரன்களை எடுக்க தவறிய இந்தியா போராடி தோல்வியடைந்தது. அதனால் நாக் அவுட் சுற்று செல்வதற்கு எஞ்சிய 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த உலக கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அசத்தும் நிலையில் பேட்டிங் துறை தான் திண்டாடுகிறது. குறிப்பாக ஓப்பனிங்கில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க தவறுவது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த குறைகளை சரி செய்து கொண்டு வங்கதேசத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இந்திய அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் காத்திருக்கு:
எது எப்படி இருந்தாலும் இப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலிக்கும் இந்தியா 9வது இடத்தில் தடுமாறும் வங்கதேசத்தை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் கோப்பையை வெல்ல இந்தியா வந்துள்ளதால் அவர்களது மீது இருக்கும் அழுத்தம் தங்கள் மீது இல்லையென்று வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் கூறியுள்ளார். அதை பயன்படுத்தி இந்த தொடரில் நிறைய கத்துக் குட்டிகள் பெரிய அணிகளை வீழ்த்தியதை போன்ற சம்பவத்தை இப்போட்டியில் தங்களது அணி நிகழ்த்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டிக்கு முன்பாக பேசியது பின்வருமாறு.
“ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமாகும். அனைத்து போட்டிகளிலும் நாங்கள் ஒரே அணுகு முறையை பின்பற்றுகிறோம். அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட அணிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் எங்களது வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்களுடைய கடைசி 2 போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம். மேலும் நாங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானை தோற்கடித்தால் அது அதிர்ச்சியாகும்”
“பேப்பரில் அவர்கள் இருவரும் பலமான அணிகளாக இருந்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடினால் ஏன் எங்களால் வெல்ல முடியாது?. அதிலும் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்ததை நாங்கள் பார்த்தோம். அதை நாங்களும் செய்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். மேலும் போட்டியில் இந்தியாவுக்கு மைதானம் முழுக்க ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்”
“அதனால் இப்போட்டில் இந்தியா வெல்லும் அணியாக களமிறங்கும். அவர்கள் இங்கே உலக கோப்பையை வெல்ல வந்திருக்கலாம் ஆனால் நாங்கள் இங்கே உலககோப்பையை வெல்ல வரவில்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டு நாங்கள் இந்தியாவை தோற்கடிக்கும் பட்சத்தில் அது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமையலாம். அந்த வகையில் இப்போட்டியில் நாங்கள் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்க முடிந்த வரை முயற்சிப்போம்” என்று கூறினார்.
மேலும் தற்சமயத்தில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டிய அவர் இந்தியாவை சாய்க்க விரைவில் டீம் மீட்டிங் போட இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு உலக கோப்பையை வெல்ல வரவில்லை இந்தியா, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை சாய்க்க வந்துள்ளோம் என்று சாகிப் அல் ஹசன் இப்படி பேசியுள்ளது நிறைய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : ஆரம்பித்த ரன்ரேட் விளையாட்டு, இங்கிலாந்தின் வெற்றியால் பறிபோன ஆஸ்திரேலியாவின் கனவு – விவரம் இதோ
அதனால் இப்படி பேசி பேசி வெற்றி பெறுவதற்கு முன்பே வாய்ச்சவடால் விட்டு கொண்டாடுவதாலேயே உங்களது கிரிக்கெட் இன்னும் முன்னேறாமலேயே இருக்குப்பதாக ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து கலாய்க்கிறார்கள்.