ஆரம்பித்த ரன்ரேட் விளையாட்டு, இங்கிலாந்தின் வெற்றியால் பறிபோன ஆஸ்திரேலியாவின் கனவு – விவரம் இதோ

ENG vs NZ Devon Conway
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் குரூப் 1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்தை 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வென்றாக வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்டது. புகழ்பெற்ற பிரஸ்பேன் காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அலெக்ஸ் ஹேல்ஸ் 52 (40) ரன்களில் அவுட்டானார்.

அவருடன் கேப்டன் ஜோஸ் பட்லர் அசத்தலாக பேட்டிங் செய்தாலும் மிடில் ஆர்டரில் மொயின் அலி 5 (6) லியம் லிவிங்ஸ்டன் 20 (14) ஹரி ப்ரூக் 7 (3) பென் ஸ்டோக்ஸ் 8 (7) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமாளித்தனர். ஆனால் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட கேப்டன் ஜோஸ் பட்லர் 7 பவுண்டர் 2 சிக்ஸருடன் 73 (47) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ரன் அவுட்டனார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 179/6 ரன்கள் குவித்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

போராடிய நியூஸிலாந்து:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 3 (9) ஃபின் ஆலன் 16 (11) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 28/2 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினர். ஆனால் இந்த ஜோடியில் கடைசி வரை அதிரடியை துவக்காத கேப்டன் வில்லியம்சன் 3 பவுண்டரியுடன் 40 (40) ரன்களில் நடையை கட்டினார்.

அதை பயன்படுத்திய இங்கிலாந்து அடுத்து வந்த ஜிம்மி நீசம் 6 (3) டார்ல் மிட்சேல் 3 (5) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது. இருப்பினும் மறுபுறம் மிரட்டிய கிளன் பிலிப்ஸ் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்துக்கு கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த சமயம் பார்த்து கிளன் பிலிப்ஸ் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 62 (36) ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்துக்கு பெரிய திருப்பு முனை ஏற்பட்டது.

- Advertisement -

ஏனெனில் அவருக்குப் பின் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாததால் இறுதியில் மிச்சல் சேட்னர் 15* (10) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து போராடி தோற்றது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து பங்கேற்ற 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து 5 புள்ளிகளுடன் குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

தற்சமயத்தில் முதல் 3 இடங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் உள்ளன. இதன் காரணமாக அந்த பிரிவில் அரை இறுதி சுற்றுக்கு செல்வதற்கான போட்டி கடுமையாகியுள்ளது. குறிப்பாக இந்த 3 அணிகளில் தங்களது கடைசி போட்டியில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் 2வது இடத்தை பிடிக்க இதே 3 அணிகளில் ரன் ரேட் அடிப்படையில் கடைசி நேரத்தில் கடுமையான போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்களுடைய முறையே அயர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் சிரமமின்றி அரை இறுதிக்கு சென்று விடும்.

ஆனால் தற்போது அவ்விரு அணிகளை காட்டிலும் குறைவான ரன் ரேட்டை கொண்டுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் கூட அரை இறுதிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 2 அணிகளில் குறிப்பாக இங்கிலாந்து அதனுடைய கடைசி போட்டியில் தோற்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய கடைசிப் போட்டியில் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் 90% ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முடிவுகள் வர வாய்ப்புள்ளதால் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் அந்த அணியின் வாய்ப்பு பறிபோனதாகவே பார்க்கப்படுகிறது

Advertisement