
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் வெற்றி வாகை சூடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்து தடுமாறிய இந்திய அணி 2023 ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
சொல்லப்போனால் அந்த வெற்றி துவண்டு கிடந்த இந்திய அணிக்கு புதிய தெம்பையும் வலுவையும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் காயத்தால் விளையாடுவார்களா என்று சந்தேகிக்கப்பட்ட கே.எல் ராகுல், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் முழுமையாக குணமடைந்து ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர். அதே போல சமீபத்திய தொடர்களில் தடுமாறிய கேப்டன் ரோஹித் சர்மா, கில் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் அத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார்கள்.
டாப் ஸ்பின்னர்:
அவர்களைப் போலவே முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்று முக்கிய சமயத்தில் ஃபார்முக்கு வந்துள்ளதும் இந்திய அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவிடம் வலுவான சுழல் பந்து வீச்சு கூட்டணி இருப்பதாக 1970களில் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த 81 வயதாகும் முன்னாள் வீரர் இன்டிகாப் ஆலம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பையின் சிறந்த ஸ்பின்னராக களமிறங்குவதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2022 ஆசிய கோப்பை ஃபைனலில் விளையாடிய விதத்தை வைத்து உலகக் கோப்பையை வெல்ல மற்ற அணிகள் தோற்கடிக்க வேண்டிய அணியாக இந்தியா இருக்கிறது. அவர்களுடைய சுழல் பந்து வீச்சு அட்டாக் உயர்ந்து நிற்கிறது. இந்த தொடரில் குல்தீப் பெரிய பங்காற்றுவார்”
“அவர் அனைத்து பேட்ஸ்மேன்களையும் சோதிப்பார். மேலும் ஜடேஜா – குல்தீப் ஆகியோர் எதிரணிக்கு மிரட்டலை கொடுக்கும் ஜோடியாக இருப்பார்கள். குறிப்பாக என்னை பொறுத்த வரை மேட்ச் வின்னராக இருக்கும் குல்தீப் இந்த உலகக் கோப்பையில் சிறந்த ஸ்பின்னராக இருக்கிறார். தற்போது அவர்களுடன் அஸ்வினும் இணைந்துள்ளார். மறுபுறம் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயமாக இந்திய மண்ணில் விளையாடுவது அழுத்தமாக இருக்கும்”
இதையும் படிங்க: இங்கிலாந்தில் 113 ரன்கள்.. கவுண்டி சாம்பியன்.. அடுத்த நாளே இந்தியாவில் 72 ரன்கள் – தீயாய் விளையாடும் சுதர்சன்
“அதனால் வெற்றி என்பது அணி நிர்வாகம் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் வைத்து வீரர்களை விளையாட வைப்பதில் இருக்கிறது. பொதுவாக உலகக் கோப்பைக்கு நீங்கள் 4 வருடமாக தயாராவீர்கள். எனவே அங்கே மக்கள் நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படுங்கள்” என்று கூறினார். இந்த நிலைமையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.