இங்கிலாந்தில் 113 ரன்கள்.. கவுண்டி சாம்பியன்.. அடுத்த நாளே இந்தியாவில் 72 ரன்கள் – தீயாய் விளையாடும் சுதர்சன்

- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி வருகிறார். ஆரம்பத்தில் டிஎன்பிஎல் தொடரில் விளையாடி தம்முடைய திறமையை நிரூபித்ததால் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்காக அறிமுகமான அவர் முதல் வருடத்திலேயே கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார். அதே போல இந்த வருடமும் ஃபைனலில் சென்னைக்கு எதிராக 97 ரன்கள் நொறுக்கிய அவர் சச்சின் பாராட்டுகளை அள்ளினார்.

அதை தொடர்ந்து டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற கோவை கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த அவருக்கு முதல் முறையாக இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தீயாக சுதர்சன்:
அப்படி தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சர்ரே அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு தாமாக தேடி வந்தது. குறிப்பாக சர்வதேச அளவில் விளையாடாத போதிலும் நல்ல திறமைகளை வெளிப்படுத்துவதால் அவரின் திறமையை அறிந்து அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது.

அந்த வாய்ப்பில் முக்கியமான போட்டியில் 73, 40 என 2 இன்னிங்ஸில் சேர்த்து 113 ரன்களை 56.5 என்ற சராசரியில் எடுத்த அவர் 2023 கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் ஒன்று தொடரை வென்ற சர்ரே அணியில் ஒருவராக சாம்பியன் பட்டத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேரடியாக இந்தியாவுக்கு திரும்பிய அவர் ராஜ்கோட் நகரில் அக்டோபர் 1ஆம் தேதி துவங்கிய இராணி கோப்பை போட்டியில் களமிறங்கினார்.

- Advertisement -

குறிப்பாக கவுண்டி தொடரில் விளையாடிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு களமிறங்கினார். அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு கேப்டன் ஹனுமா விஹாரி 33, மயங் அகர்வால் 32, சர்பராஸ் கான் 17, யாஷ் துள் 10, கேஎஸ் பரத் 36 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இதையும் படிங்க: கண்டிப்பா 2023 உ.கோ தொடரின் அந்த டாப் 3 சாதனை லிஸ்ட்ல விராட் கோலி இருப்பாரு.. ஏபிடி உறுதி

இருப்பினும் மறுபுறம் துவக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக விளையாடிய சுதர்சன் 7 பவுண்டரியுடன் 72 (164) ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் முதல் நாள் முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 298/8 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல துவக்கத்தை பெற்றது. அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக தீயாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் அவர் அந்த இலக்கை விரைவில் எட்டுவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement