33/3 டூ 237/4.. கேப்டனுடன் சேர்ந்து சொந்த ஊரில் ஹீரோவாக இந்திய அணியை காப்பாற்றிய ஜடேஜா.. அசத்திய சர்பராஸ்

IND vs ENG 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றது. எனவே சமனில் உள்ள இந்த தொடரில் முன்னிலை பெறும் எண்ணத்துடன் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0, ரஜத் படிடார் 5 என இளம் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 33/3 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்திய அணிக்கு மறுபுறம் நின்ற கேப்டன் ரோகித் சர்மாவுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

மீண்டெழுந்த இந்தியா:
அதில் முந்தைய 2 போட்டிகளில் சுமாராக விளையாடி விமர்சனங்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா இம்முறை தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய 11வது டெஸ்ட் சதத்தை அடித்து 14 பவுண்டரி 3 சிக்சருடன் 131 ரன்கள் குவித்து இந்தியாவை 237/4 என்ற நிலைக்கு கொண்டு வந்து ஆட்டமிழந்தார்.

அவருடன் நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜாவும் அரை சதம் கடந்தார். அப்போது எதிர்புறம் வந்த சர்ப்ராஸ் கான் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதே வேகத்தில் சிறப்பாக விளையாடிய அவரும் வெறும் 48 பந்துகளில் தன்னுடைய குடும்பத்திற்கு முன்னிலையில் அரை சதமடித்து கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

அந்த வகையில் நன்கு செட்டிலான அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்புறம் ஜடேஜா 99 ரன்களில் இருந்த போது 62 ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜடேஜா தன்னுடைய 4வது டெஸ்ட் சதத்தை அடித்தார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் இந்தியா 326/5 ரன்கள் குவித்து இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 36 வயதில் அசத்திய ரோஹித் சர்மா.. விஜய் ஹசாரேவின் 73 வருட சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

குறிப்பாக 33/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்திய அணி அழுத்தமான நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்த உதவியுடன் மீண்டெழுந்தது. அவருடன் ஜோடி சேர்ந்து தனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் பெரிய பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவை காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜாவும் சதமடித்து 110* ரன்கள் குவித்து ஹீரோவாக செயல்பட்டு வருகிறார். அதற்கிடையே தன்னுடைய தேர்வை நியாயப்படுத்தும் வகையில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இங்கிலாந்து சார்பில் இதுவரை மார்க் வுட் அதிகபட்சமாக 3* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Advertisement