ஒருவழியா இந்தியாவுக்கு அடுத்த ஜஹீர் கான் கிடைச்சுட்டாரு – இளம் பவுலரின் திறமையை பாராட்டும் கம்ரான் அக்மல்

Kamran
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்று கணக்கில் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றுள்ளது. விரைவில் துவங்கும் உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் இந்த கடைசி தொடரில் சமீபத்திய ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது. குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சஹர் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் இத்தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளனர். அந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இவ்விருவருமே அனலாக பந்துவீசி 9/5 என ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்காவை மடக்கிப்பிடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

INDIA Arshdeep Singh Harshal Patel

- Advertisement -

அதிலும் குறிப்பாக பவுலிங்க்கு கைகொடுத்த திருவனந்தபுரம் மைதானத்தில் அற்புதமாக ஸ்விங் செய்த அர்ஷிதீப் சிங் டீ காக் 1, ரோஸவ் 0, மில்லர் 0 என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஏற்கனவே சமீபத்திய ஆசிய கோப்பையில் புவனேஸ்வர் குமாரை விட கடைசி ஓவர்களில் துல்லியமாக செயல்பட்ட இவர் ரசிகர்களின் பாராட்டை பெற்று உலக கோப்பையில் 11 பேர் அணியில் நேரடியாக விளையாடும் அளவுக்கு தன்னை நிரூபித்து வருகிறார்.

ஜஹீர் கான் கிடைச்சுட்டாரு:
அத்துடன் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள ஒரே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது அவருக்கு மேலும் சாதகத்தை கொடுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வலது கை வேகப்பந்து வீச்சாளர்களை விட இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா போன்ற வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய மைதானங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பவுலர்களாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி குறைந்த ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமையை வெளிப்படுத்தியதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அர்ஷிதீப் சிங் இதுவரை 12 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை 7.45 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

Arshdeep Singh

இந்நிலையில் காலம் காலமாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் நிலவும் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஜஹீர் கானுக்கு பின் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைத்து விட்டதாக அரஷ்தீப் சிங்கை முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார். இர்பான் பதான் போன்ற இடது கை பவுலர்கள் வந்தும் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாத நிலையில் இவர் அடுத்த ஜஹீர் கானாக நீண்ட காலம் செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனேகமாக இந்திய அணி அடுத்த ஜாஹீர் கான் கண்டறிந்து விட்டது என்று நினைக்கிறேன். வேகம் மற்றும் ஸ்விங் ஆகிய இரண்டையுமே கொண்டுள்ள அர்ஷிதீப் சிங் அறிவுப்பூர்வமாக பந்து வீசும் திறமையும் பெற்றுள்ளார். மனதளவில் பலமான அவர் தன்னுடைய திறமைகளை அறிந்து போட்டி நடைபெறும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் பந்து வீசுகிறார். அவர் ரோஸவ்வை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து டி காக்’கை கிளீன் போல்ட்டாக்கினார்”

Kamran

“ஆனாலும் அவர் எடுத்ததில் டேவிட் மில்லர் விக்கெட் தான் சிறந்ததாகும். ஏனெனில் தொடர்ச்சியாக மில்லருக்கு வெளியே பந்துகளை வீசிய அவர் கூர்மையான இன் ஸ்விங்க்கர் பந்தால் போல்ட்டாக்கினார். அந்த வகையில் அபாரமாக பந்து வீசும் அவரிடம் முதிர்ச்சியும் உள்ளது. நல்ல வேகம் பெற்றுள்ள அவர் இளமையாகவும் உள்ளார் என்பது இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாகும். ஏனெனில் அவர்களுக்கு ஜஹிர் கானுக்கு பின் நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஏற்கனவே நிறைய பாத்துட்டேன். காயத்தினால் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு – பும்ரா அளித்த பேட்டி

அவர் கூறுவது போல காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தனது திறமையை பயன்படுத்தி பந்து வீசும் அர்ஷிதீப் சிங் அறிமுகமானது முதல் இதுவரை பந்துவீச்சில் குறை சொல்லும் அளவுக்கு செயல்படாமல் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். எனவே ஜாஹிர் கானுக்கு பின் இந்தியாவின் நீண்டகால இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான தேடலுக்கு இவர் நல்ல தீர்வாக இருப்பார் என்று நம்பலாம்.

Advertisement