
இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் நேபாள் அணிகளை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் தேதி இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இலங்கையில் உள்ள தம்புலா நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு திலாரா அக்தர் 6, காட்டுன் 4, இஷ்மா 8 என டாப் 3 வீராங்கனைகளை ரேணுகா சிங் தன்னுடைய மிரட்டலான வேகத்தால் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தார்.
ஃபைனலில் இந்தியா:
அதனால் 21/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய வங்கதேசத்துக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் நிகர் சுல்தானா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் ருமானா அகமது 1, ரபேயா கான் 1, ரிட்டு மோனி 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய நிகர் சுல்தானா 32 ரன்களில் ராதா யாதவ் சுழலில் சிக்கினார்.
இறுதியில் சொர்ணா அக்தர் 19 * ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் வங்கதேசம் வெறும் 80/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3, பூஜா வஸ்திரக்கர் மற்றும் தீப்தி சர்மா தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். இப்போட்டியில் எடுத்த 1 விக்கெட்டும் சேர்த்து சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் பூஜா வஸ்திரகர் 57* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அதன் வாயிலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் ஜூலன் கோஸ்சுவாமி சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ஜூலன் கோஸ்வாமி 56 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதே போல ஒரு மகளிர் ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் (7) எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக ரேணுகா சிங் தனது சொந்த சாதனையை (2022இல் 6 விக்கெட்டுகள்) உடைத்து புதிய சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் பாகிஸ்தானுக்கு மட்டும் இந்திய அணியை அனுப்ப கூடாது. ஏன் தெரியுமா? – ஹர்பஜன் சிங் விளக்கம்
அதைத் தொடர்ந்து 81 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் மந்தனா 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55* (39), ஷபாலி வர்மா 26* (28) ரன்கள் எடுத்தனர். அதனால் 11 ஓவரிலேயே 83/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று வங்கதேசத்தை நாக் அவுட் செய்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜூலை 28ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இலங்கை அல்லது பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றுள்ளது