IND vs SL : சரவெடி வேகத்தில் சேசிங்.. ஆஸியின் 20 வருட சாதனையை தகர்த்த இந்தியா.. இலங்கையையும் முந்தி 2 புதிய உலக சாதனை

India Record
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2023 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கையை தோற்கடித்த இந்தியா புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கடந்த 2 வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த அத்தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தெறித்த பந்து வீச்சில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசி ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றிய முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 51 என்ற சுலபமான இலக்கை துரத்துவதற்கு கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் இசான் கிசான் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

- Advertisement -

சரவெடி சேசிங்:
குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் இசான் கிசான் 3 பவுண்டரியுடன் 23 (18) ரன்களும் சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27* (19) ரன்களும் எடுத்தனர். அதனால் 6.1 ஓவரிலேயே 51/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

அதை விட இப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த இலக்கை 263 பந்துகள் மீதம் வைத்து எட்டிப் பிடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பலதரப்பு அணிகள் பங்கேற்ற தொடரின் ஃபைனலில் பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியாவின் 20 வருட சாதனையை தவிர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விபி சீரிஸ் எனும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதின.

- Advertisement -

அதில் சிட்னி நகரில் நடைபெற்ற முதல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 118 ரன்களை ஆஸ்திரேலியா 226 பந்துகள் மீதம் வைத்து சேசிங் செய்து வென்றதே முந்தைய சாதனையாகும். இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் பந்துகள் அடிப்படையில் இந்தியா தன்னுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து மற்றுமொரு சரித்திரம் படைத்தது.

இதையும் படிங்க: ஜாம்பவான்கள் சமீந்தா வாஸ் சாதனை சமன்.. வக்கார் யூனிஸ், நிடினியை முந்தி இரட்டை சரித்திர சாதனை படைத்த சிராஜ்

இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு ப்ளூம்போய்ண்டன் மைதானத்தில் நடைபெற்ற கென்யாவுக்கு எதிரான போட்டியில் 231 பந்துகளை மீதம் வைத்து வென்றதே இந்தியாவின் முந்தைய சாதனையாகும். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு எதிரணியின் சொந்த மண்ணில் (இலங்கை) பந்துகள் அடிப்படையில் பெரிய வெற்றியை பதிவு செய்து இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் இலங்கை 244 பந்துகள் மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

Advertisement