48 சிக்ஸர்கள்.. இங்கிலாந்துக்கு அதிரடியின் உண்மையான அர்த்தத்தை காட்டிய இந்தியா.. புதிய 2 உலக சாதனை

IND vs ENG 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா மூன்றாவது போட்டியிலும் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வரிசையில் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து வீரர்கள் எச்சரித்திருந்தனர்.

- Advertisement -

உண்மையான அதிரடி:
அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை கடைசியில் மடக்கிப் பிடித்த இங்கிலாந்து மகத்தான வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 399 ரன்களை துரத்திய அந்த அணி சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதை விட 3வது போட்டியில் பென் டக்கெட் 153 (151) ரன்கள் விளாசி அபாரமாக பேட்டிங் செய்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 224/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஜோ ரூட் போன்ற வீரர்களும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து தங்களுடைய விக்கெட்டை பரிசளித்ததால் 122 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

மறுபுறம் 3வது போட்டியில் 33/3 என தடுமாறிய போது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடிய இந்தியா பின்னர் அதிரடியாக விளையாடி 445 ரன்களும் 430/5 ரன்களும் குவித்து மெகா வெற்றி பெற்றது. அந்த வகையில் உண்மையான அதிரடிக்கு எடுத்துக்காட்டாக விளையாடி வரும் இந்திய அணி இத்தொடரில் இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 48* சிக்சர்கள் அடித்துள்ளது.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 48*, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. இந்தியா : 47, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019
3. இங்கிலாந்து : 43, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023
4. ஆஸ்திரேலியா : 40, இங்கிலாந்துக்கு எதிராக, 2013 – 2012
5. பாகிஸ்தான் : 37, இந்தியாவுக்கு எதிராக, 2006

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் தான் இந்தியாவின் புதிய சேவாக்.. வெளிப்படையாக பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

அத்துடன் 3வது போட்டியில் மட்டும் 28 சிக்சர்கள் அடித்த இந்தியா ஒரு குறிப்பிட்ட டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா : 28, இங்கிலாந்துக்கு எதிராக, ராஜ்கோட், 2024*
2. இந்தியா : 27, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, விசாகப்பட்டினம், 2019
3. நியூஸிலாந்து : 22, பாகிஸ்தான் எதிராக, சார்ஜா, 2014

Advertisement