ஜெய்ஸ்வால் தான் இந்தியாவின் புதிய சேவாக்.. வெளிப்படையாக பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

Jaiswal Sehwag
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

இந்த தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இது வரை 545* ரன்கள் குவித்து இந்திய அணியின் பேட்டிங் துறையை தாங்கிப் பிடித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக முதல் போட்டியில் 80 (76) ரன்கள் அடித்த அவர் 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 214 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

புதிய சேவாக்:
அந்த போட்டியில் 50, 100, 150, 200 ஆகிய ரன்களை ஜாம்பவான் சேவாக் போல பவுண்டரி அல்லது சிக்ஸரை பறக்க விட்டு தொட்ட அவர் 3வது போட்டியிலும் 50, 100 ரன்களை சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசி தொட்டார். மேலும் அப்போட்டியில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களையும் பறக்க விட்ட அவர் மொத்தம் 214* ரன்கள் விளாசி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதை விட 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார். இருப்பினும் அப்படி அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதமடித்தும் இதுவரை அவர் ஆட்டநாயகன் விருதை வெல்லாதது ஆச்சரியம் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் பலரின் பாராட்டுகளை பெற்று வரும் ஜெய்ஸ்வால் வருங்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தை கண்ட இந்திய அணி – எத்தனையாவது இடம் தெரியுமா?

இதை தொடர்ந்து இந்த தொடரின் நான்காவது போட்டி ரஞ்சி நகரில் நடைபெற உள்ளது. அதில் கேஎல் ராகுல் போன்ற மேலும் சில வீரர்கள் இந்திய அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போட்டியிலும் இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement