ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடைபெற்ற இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்தியா ஆகிய அணிகள் மோதின. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் தடுமாற்றமாக செயல்பட்டு 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு சுப்மன் கில் 19, விராட் கோலி 3, ஹர்டிக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.
இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 53, இஷான் கிசான் 33, கேஎல் ராகுல் 39 என இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து இந்தியாவின் ஓரளவு காப்பாற்றினர். மறுபுறம் பந்து வீச்சில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய இலங்கை சார்பில் அதிகபட்சமாக துணித் வெல்லாலகே 5 விக்கெட்களையும் சரித் அசலங்கா 4 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 214 ரன்கள் துரத்திய இலங்கைக்கு பதும் நிஷாங்கா 6, கருணரத்னே 2, குசால் மெண்டிஸ் 15 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சீரான இடைவெளியில் பும்ரா மற்றும் சிராஜ் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
போராட்ட வெற்றி:
அதனால் 25/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று பெரிய சவாலை கொடுத்த சமரவிக்ரமாவை 17 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் மறுபடியும் 22 ரன்கள் எடுத்த போராடிய அசலங்காவையும் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் சனாக்காவும் 9 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கியதால் 99/6 என சரிந்த இலங்கையின் வெற்றி கேள்விக்குறியானது.
ஆனால் அப்போது வந்த வெல்லாலகே தம்முடைய பவுலிங் போலவே பேட்டிங்கிலும் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடினார். குறிப்பாக எதிர்ப்புறம் நின்ற தனஞ்செயா டீ சில்வாவுடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சவாலை கொடுத்ததால் இந்தியா வெற்றி பெறுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டது.
இருப்பினும் அந்த சமயத்தில் டீ சில்வாவை 41 (66) ரன்களில் அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா திருப்பு முனையை உண்டாக்கினார். அதை பயன்படுத்திய இந்தியா ஒருபுறம் வெல்லலேகேவை 42* (46) ரன்களுடன் தொடர்ந்து போராட வைத்து விட்டு எதிர்ப்புறம் தீக்ஸனா 2, ரஜிதா 1, பதிரனா 0 என டெயில் எண்டர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது. அதனால் 41.3 ஓவரில் இலங்கையை 172 ரன்கள் சுருட்டிய இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IND vs SL : இந்திய அணியை சுருட்டி வீசிய 20 வயது இளம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் – இவர் யார் தெரியுமா?
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மேலும் நேற்று பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தற்போது இலங்கையையும் வீழ்த்தியதால் சூப்பர் 4 சுற்றில் 4 புள்ளிகளுடன் 2023 ஆசிய கோப்பை தொடரின் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் வங்கதேசம் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் மோத ஃபைனலுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.