
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 53 (47) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்து ரன் அவுட்டானார். அவருடன் 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீராங்கனை பிரித்திகா ராவல் அரை சதமடித்து 76 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.
அவருடன் 3வது இடத்தில் களமிறங்கி விளையாடிய ஹர்லீன் தியோல் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடினார். 5வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கௌர் ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அசத்தலாக ஹர்லீன் தியோல் தனது முதல் சதத்தை அடித்து 16 பவுண்டரியுடன் 113 (106) ரன்கள் விளாசி அவுட்டானார்.
இறுதியில் ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக 56 (32), ரிச்சா கோஸ் 16* (6) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 50 ஓவரில் 358-5 ரன்களை குவித்தது. இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் குவித்த அணி என்ற உலக சாதனை இந்தியா படைத்தது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு லீசெஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து 318-5 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.
பின்னர் 359 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் முடிந்தளவுக்கு போராடியும் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஹைய்லே மேத்யூஸ் சதத்தை அடித்து 106 ரன்கள் குவித்தார். ஏனைய வீராங்கனைகள் யாரும் 50 ரன்கள் கூட எடுக்கவில்லை. இந்திய அணிக்கு அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 3, டைட்டஸ் சாது 2, பிரதிகா ராவல் 2, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதையும் படிங்க: மற்ற கேப்டன்களை விட எம்.எஸ் தோனி சக்சஸ்புல் கேப்டனாக இருக்க இதுதான் காரணம் – அஷ்வின் கருத்து
அதனால் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்லீன் தியோல் ஆட்டநாயகி விருதை வென்றார். அந்த வகையில் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் இந்திய மகளிரணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.