வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் இறுதிப் பயணத்தின் அங்கமாக ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற போதிலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் 17, கெய்ல் மேயர்ஸ் 2, அலி அதனேஷ் 22 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 45/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது கேப்டன் சாய் ஹோப் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் 2 வருடங்கள் கழித்து தேர்வான சிம்ரோன் ஹெட்மயர் 11, ரோவ்மன் போவல் 4, ரோமாரியா செஃபார்ட் 0 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ரவீந்திர ஜடேஜா தனது மாயாஜால சுழலில் சொற்ப ரன்களில் காலி செய்தார்.
எளிதான வெற்றி:
போதாக்குறைக்கு டாமினிக் ட்ரெக்ஸ் 3, யானிக் 3, ஜெயடேன் சீல்ஸ் 0 என டெயில் எண்டர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த குல்தீப் யாதவ் மறுபுறம் போராடிய கேப்டன் சாய் ஹோப்பையும் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (45) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 23 ஓவரில் வெறும் 114 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது.
அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 115 என்று சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா தமக்கு கொடுத்த ஓப்பனிங் இடத்தை பயன்படுத்திய இசான் கிசான் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். ஆனால் எதிர்புறம் தடுமாற்றமாக செயல்பட்ட சுப்மன் கில் 7 (16) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அந்த நிலைமையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு நல்ல துவக்கத்தை பெற்றாலும் வழக்கம் போல மீண்டும் 19 (25) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே அவரைத் தொடர்ந்து வந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை பின்னடைவை கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட இசான் கிசான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 52 (46) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த சர்துள் தாக்கூரும் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஒரு வழியாக கடைசி நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கி 2 பவுண்டரியுடன் 12* (19) ரன்கள் எடுத்தார். அவருடன் எதிர்புறம் ரவீந்திர ஜடேஜா 16* (21) ரன்கள் எடுத்ததால் 22.5 ஓவரில் 118/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும் இந்தியா இந்த 115 ரன்களை பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குறைந்தபட்சம் 15 ஓவர்களிலேயே எடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் முடிந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் திணறிய இந்தியா 5 விக்கெட்டுகள் எழுந்து போராடி இந்த போட்டியில் வென்றது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க:IND vs WI : குறைந்த இலக்கை சேசிங் செய்ய இவ்ளோ போராட்டமா? வெ.இ பந்து வீச்சில் திணறிய இந்தியா – போராடி வென்றது எப்படி
அதன் காரணமாக டெஸ்ட் தொடரை போலவே 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காமல் பந்து வீச்சில் போராடிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.