அசத்திய ஸ்கை, டி20 உ.கோ முதல் பயிற்சி போட்டியில் இந்தியா தடுமாற்ற வெற்றி – மொத்த விவரம் இதோ

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஸ்திரேலியா பறந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடி பழகிய இந்திய அணியினர் பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நிலவும் எக்ஸ்ட்ரா வேகம், பவுன்ஸ் ஆகிய ஆடுகளங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுவதற்காக உலகிலேயே அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்டுள்ள உலகப் புகழ்பெற்ற வாக்கா (WACA) மைதானத்தில் பயிற்சி எடுக்க பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த நிலையில் என்ன தான் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தாலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்ததற்கு காரணமாக அமைந்த குறைகளை சரி செய்யும் கடைசி வாய்ப்பாக ஐசிசி நடத்தும் 2 உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாகவே தற்போது பயிற்சி எடுத்து வரும் பெர்த் நகரில் உள்ள வாக்கா மைதானத்தை சொந்த மண்ணாக கொண்ட “மேற்கு ஆஸ்திரேலிய லெவன்” அணிக்கு எதிராக 2 ஸ்பெஷல் பயிற்சி போட்டிகளிலும் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

அசத்திய ஸ்கை:
அதில் அக்டோபர் 10ஆம் ஆம் தேதியான இன்று இந்திய  நேரப்படி காலை 11 மணிக்கு துவங்கிய முதல் போட்டி எங்குமே ஒளிபரப்பு செய்யப்படாத நிலையில் அதைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் பார்ப்போம். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆச்சரியப்படும் வகையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினாலும் இருவருமே மெதுவாக விளையாடி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். ஏனெனில் முதலில் கேப்டன் ரோகித் சர்மா 3 (4) ரன்களில் அவுட்டாக மறுபுறம் மெதுவாக விளையாடிய ரிஷப் பண்ட் 9 (16) ரன்களில் நடையை கட்டினார்.

அதனால் 39/2 என்ற தடுமாற்றமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு காயத்திலிருந்து குணமடைந்த தீபக் ஹூடா அடுத்ததாக களமிறங்கி 22 (14) ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் மற்றொருபுறம் உச்சகட்ட பார்மில் இருக்கும் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல ஆரம்பத்திலிருந்தே அதிரடியை துவக்கினார். அவருக்கு உறுதுணையாக ஹர்திக் பாண்டியா 27 (20) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 52 (35) ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

தடுமாற்ற வெற்றி:
இறுதியில் தினேஷ் கார்த்திக் 19* (13) ரன்களும் அக்சர் படேல் 10 (5) ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 158/6 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 159 ரன்களை துரத்திய மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் இணைந்து புதிய பந்தை ஸ்விங் செய்து தங்களது முழுமையான பலத்தை வெளிப்படுத்தி பவர் பிளே ஓவர்களின் முடிவில் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 29/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணி எளிதாக தோற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மிடில் ஆர்டரில் அசத்திய சாம் பென்னிங் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 59 (53) ரன்கள் குவித்து வெற்றி போராடி அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் வெற்றிக்கு போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 145/8 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையும் படிங்க : வேறு எந்த அணியும் தொடாத உச்சம் – ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று உலகசாதனை படைத்த இந்தியா

இப்போட்டியில் விராட் கோலி, ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்காத நிலையில் சூரியகுமார் மட்டும் அதிரடியாக விளையாடமல் போயிருந்தால் வெற்றி சந்தேகமாகியிருக்கும். அதே சமயம் அர்ஷிதீப் – புவனேஸ்வர் ஆகியோர் கொடுத்த 21/4 என்ற தொடக்கம் தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றியது. அப்படி தடுமாற்ற வெற்றியை பதிவு செய்த இந்தியா அடுத்ததாக அக்டோபர் 13ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலிய அணியை 2வது போட்டியில் சந்திக்கிறது.

Advertisement