
இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் 3வது போட்டி ஜூலை 30ஆம் தேதி இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெற்றது.
இருப்பினும் மழையால் தாமதமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ரிங்கு சிங் 1, கேப்டன் சூரியகுமார் 8 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
சூப்பர் ஓவரில் வெற்றி:
அதனால் 30/4 என சரிந்த இந்திய அணிக்கு மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த சிவம் துபே 13 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அதற்கடுத்ததாக வந்த ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் 6வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 (32) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரியான் பராக் அதிரடியாக 26 (18), தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 25 (18), ரவி பிஸ்னோய் 8* ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய இந்தியா 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இலங்கைக்கு 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நிசாங்கா 26 (27) ரன்களில் ரவி பிஷ்னோய் சுழலில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய குசால் மெண்டிஸ் அடுத்ததாக வந்த குசால் பெரேராராவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதனால் இலங்கை 117/2 என்ற வலுவான நிலையை எட்டியதால் இந்தியாவின் தோல்விக்கு கிட்டத்தட்ட உறுதியானது.
ஆனால் அப்போது குசால் மெண்டிஸ் 43 (41) ரன்களில் பிஸ்னோய் சுழலில் அவுட்டானார். அப்படியே தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் அடுத்து வந்த ஹசரங்கா 3, கேப்டன் அசலங்கா 0 ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை உண்டாக்கினார். அதை பயன்படுத்திய கேப்டன் சூரியகுமார் கடைசி 12 பந்துகளில் இலங்கைக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது வித்தியாசமாக சிந்தித்து 19வது ஓவரை ரிங்கு சிங்கிடம் கொடுத்தார்.
அதைப் பயன்படுத்திய ரிங்கு சிங் இலங்கையின் குசால் பெரேரா 46, ரமேஷ் மெண்டிஸை 3 ரன்களில் அவுட்டாக்கி போட்டியை தலைகீழாக மாற்றினர். இறுதியில் 6 ரன் தேவைப்பட்ட போது முதலில் சிராஜை அழைத்த சூரியகுமார் பின்னர் தாமே பந்து வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் 20 ஓவரில் இலங்கையும் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 2 ரன் மட்டுமே கொடுத்து பெரேரா, நிஷாங்கா விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 3 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தீக்சனா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தலையே சூரியகுமார் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: 9 போர்ஸ் 9 சிக்ஸ்.. திருப்பூரை சூறையாடி மாஸ் காட்டிய சாய் சுதர்சன்.. ஃபைனலுக்கு சென்ற கோவை
அந்த வகையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா கடைசியில் இலங்கையை மடக்கி பிடித்து சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா தங்களை சூரியகுமார் – கம்பீர் தலைமையிலும் உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது.