
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்திய மகளிரணி தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி டிசம்பர் 23ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 128/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 31 (24), ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 (32), ஹாசினி பெரேரா 22 (28) ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீராங்கனைகள் யாருமே 15 ரன்கள் கூட தாண்டவில்லை. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்ரீ சரணி மற்றும் வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 129 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடிய ரன்கள் குவித்தார்.
அவருடன் மறுபுறம் கைகோர்க்க முயற்சித்த ஸ்மிரிதி மந்தனா 14 (11) ரன்களில் கவிசா திலாரியிடம் அவுட்டானார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடியாக விளையாடி 26 (15) ரன்னில் காவியா கவிந்தி வீசிய பந்தில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷபாலி வெறும் 27 பந்துகளில் அரை சதமடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
அவருடைய அதிரடியால் 10 ஓவரின் முடிவில் இந்தியா 113/2 ரன்கள் குவித்து அசத்தியது. இதன் வாயிலாக ஒரு சர்வதேச மகளிர் டி20 போட்டியில் முதல் 10 ஓவரில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 ஓவரில் 111 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
எதிர்ப்புறம் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 10 (12) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து இலங்கையை பந்தாடிய ஷபாலி வர்மா 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 69* (34) ரன்களை 202.94 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 11.5 ஓவரிலேயே 129/3 ரன்களை குவித்த இந்தியா 49 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: அந்த போஸ்டிங்கே தப்பு.. இது கவாஸ்கருக்கு பதில் ஸ்ரீகாந்த்தை செலக்ட் பண்ண மாதிரி இருக்கு.. ராமன் பேட்டி
இதன் வாயிலாக ஒரு சர்வதேச மகளிர் டி20 போட்டியில் அதிக பந்துகளை மீதம் வைத்து இந்தியா தங்களது பெரிய சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியால் 2 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலையை அதிகரித்துள்ளது.