- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெறும் 1 ரன்.. பதம் பார்த்த ரன்ரேட்.. தெ.ஆ வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற வைத்த பாலாஜி.. டி20 உ.கோ ரீவைண்ட்

ஐசிசி டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா சில அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது. அதில் இலங்கை மண்ணில் நடைபெற்ற 2012 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி இன்னும் சில தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

2012 மார்ச் 24ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் 8, வீரேந்திர சேவாக் 17, விராட் கோலி 2, ரோஹித் சர்மா 25 (27) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

தமிழக புயல்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய யுவராஜ் சிங் 21 (15) சுரேஷ் ரெய்னா 45 (34) எம்எஸ் தோனி 23* (13) ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். ஆனாலும் கூட இந்தியா 153 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஹாசிம் அம்லா 0, ஜேக் காலிஸ் 6, கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய பஃப் டு பிளேஸிஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 65 (39) ரன்கள் குவித்து போராடி யுவராஜ் சிங் சுழலில் சிக்கினார். ஆனால் அடுத்ததாக வந்த ஜேபி டுமினி 16, ராபின் பீட்டர்சன் 10 ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தமிழக வீரர் லக்மிபதி பாலாஜியிடம் அந்த ஓவரை கேப்டன் தோனி நம்பி வழங்கினார்.

- Advertisement -

அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸர் வழங்கிய பாலாஜி இரண்டாவது பந்தில் அச்சுறுத்தலை கொடுத்த அல்பி மோர்கலை 10 (6) ரன்களில் அவுட்டாக்கி ரசிகர்களை நிம்மதியடைய வைத்தார். அதே போல அடுத்த பந்தில் ரன் வழங்காத அவரை 4வது பந்தில் மோர்னே மோர்கல் சிக்ஸர் பறக்க விட்டதால் கடைசி 2 பந்தில் தென்னாப்பிரிக்காவுக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆனால் அப்போது துல்லியமான பந்தை வீசி அவரை கிளீன் போல்ட்டாக்கிய பாலாஜி 1 பந்து மீதம் வைத்து இந்தியாவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இந்திய அணியை வெற்றி பெற வைத்து அன்றைய நாளில் தமிழக ரசிகர்களை பாலாஜி பெருமையடைய வைத்தார். மேலும் மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்து அவருடன் ஜாகீர் கான் 3, யுவராஜ் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினர்.

இதையும் படிங்க: வெறும் 109 ரன்ஸ்.. 3வது போட்டியிலேயே சூப்பர்ஓவர்.. 4, 6, 2, 1, 4, 4.. ஓமனை ஓடவிட்ட நமீபியா.. உலக சாதனை வெற்றி

இருப்பினும் அந்த உலகக் கோப்பையில் 5 லீக் போட்டிகளில் அதையும் சேர்த்து இந்தியா 4 வெற்றிகளை பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சந்தித்த தோல்வியால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பு பறிபோனது. அதனால் அந்த வருடம் லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -