ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் மூன்றாம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு பார்படாஸ் நகரில் மூன்றாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆரம்ப முதலே சுமாராக விளையாடி 19.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது. அந்த அணிக்கு காசிப் 0, நசீம் குஷி 6, கேப்டன் ஆக்கிப் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் ஜீசன் மக்சூத் 22, கலிட் கைல 34, அயன் கான் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
நமீபியா வெற்றி:
நமீபியா சார்பில் அதிகபட்சமாக ட்ரம்ப்பல்மேன் 4, டேவிட் வீஸ் 3, கேப்டன் கெர்ஹார்ட் எரசமஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 110 ரன்களை துரத்திய நமீபியா அணிக்கு மைக்கேல் வன் லிங்கன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் துவக்க வீரர் நிக்கோலஸ் டேவின் 24, ஜென் பிராங்கிலின் 45 ரன்கள் வெற்றிக்கு பாதைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அப்போது தீயாக செயல்பட்ட ஓமன் பவுலர்கள் கேப்டன் எரஸ்மஸ் 13, ஜேஜே ஸ்மட் 8, ஜென் க்ரீன் 0 என அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தது. குறிப்பாக கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது அபாரமாக செயல்பட்ட 37 வயது வீரர் மெஹர்ன் கான் 2 விக்கெட்டுகள் எடுத்து 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அதனால் டேவிட் வீஸ் 9*, மாலன் குர்கார் 1* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் நமீபியா 109/6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. ஓமன் சார்பில் அதிகபட்சமாக மெஹரன் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால் பிலால் கான் வீசிய அந்த ஓவரில் பட்டாசாக விளையாடிய நமீபியா 4, 6, 2, 1, 4, 4 என மொத்தம் 21 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு டேவிட் வீஸ் 13* (4), எரஸ்மஸ் 4* (1) ரன்கள் எடுத்தனர்.
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் 97/5.. வெறும் 136 ரன்ஸ் வைத்து ஆட்டம் காட்டிய பப்புவா அணி.. ரசிகர்கள் பாராட்டு
இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையையும் நமீபியா படைத்தது. இதற்கு முன் 2012இல் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதைத்தொடர்ந்து 22 ரன்களை துரத்திய ஓமனுக்கு எதிராக டேவிட் வீஸ் 10/1 ரன்கள் மட்டுமே கொடுத்து நமீபியாவை த்ரில் வெற்றி பெற வைத்தார்.



