7 பந்தில் 4 விக்கெட்.. பிறந்தநாளில் மேஜிக் செய்த குல்தீப்.. அடங்க மறுத்த இந்தியா தெ.ஆ அணியை வீழ்த்தியது எப்படி?

IND vs RSA 3rd t20
- Advertisement -

தென்னாப்பிரிக்கா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 3வது டி20 போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஜெஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில்லை 12 (6) ரன்களில் அவுட்டாக்கிய கேசவ் மகாராஜா அடுத்ததாக வந்த திலக் வர்மாவை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

அதனால் 23/2 என்ற தடுமாற்ற துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 14 ஓவர்கள் வரை நிலையாக நின்று தென்னாப்பிரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 60 (41) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
மறுபுறம் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய சூரியகுமார் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். அப்போது வந்த ரிங்கு சிங் 14 (10) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சூரியகுமார் 7 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 100 (56) ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் 20 ஓவர்களில் இந்தியா 201/7 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 202 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவரை மெய்டனாக வீசி முகமது சிராஜ் அழுத்தத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மேத்யூ பிரட்ஸ்கே 4 ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் கிளீன் போல்ட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய ரீசா ஹென்றிக்ஸ் 8 ரன்களில் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ஹென்றிச் க்ளாசன் 5 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் வெளுத்து வாங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 25 (14) ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அதனால் 42/4 என தென்னாப்பிரிக்கா தடுமாறிய போது டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் பெராரியா 12, பெலுக்வியோ 0, கேசவ் மகாராஜ் 1 ரன்களில் ஜடேஜா மற்றும் குல்தீப் சுழலில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்கள். இறுதியில் டேவிட் மில்லரும் 35 (25) ரன்களுக்கு அவுட்டானதால் தென்னாபிரிக்காவை 13.5 ஓவரில் 95 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மாஸ் காட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். குறிப்பாக தன்னுடைய கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் பிறந்தநாளில் மொத்தம் 5 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: 7 பந்தில் 4 விக்கெட்.. பிறந்தநாளில் மேஜிக் செய்த குல்தீப்.. அடங்க மறுத்த இந்தியா தெ.ஆ அணியை வீழ்த்தியது எப்படி?

முன்னதாக முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த போட்டியில் அடங்க மறுத்த இந்தியா 1 – 1 (3) என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணிக்கு அதனுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து இத்தொடரை சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.

Advertisement