5 ரன்னில் தவறிய சாதனை.. நியூசிலாந்தை வீழ்த்திய கிங் கோலி.. 20 வருட அவமானத்தை தூளாக்கிய இந்தியா

IND vs NZ CWC23
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தரம்சாலாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 21வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் வலுவான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் 0, வில் எங் 17 ரன்களில் சிராஜ், ஷமி வேகத்தில் அவுட்டானார்கள்.

அதனால் 19/2 என்ற தடுமாற்ற துவக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த டார்ல் மிட்சேல் – ரச்சின் ரவீந்திர ஆகியோர் நிதானமாக விளையாடினர். அதில் ஆரம்பத்திலேயே ஜடேஜா தவறவிட்ட கேட்ச்சை பயன்படுத்தி 3வது விக்கெட்க்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரவீந்திரா 75 ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் டாம் லாதம் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

சிறப்பான வெற்றி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மிட்சேல் சதமடித்து சவாலை கொடுத்த நிலையில் எதிர்புறம் கிளன் பிலிப்ஸ் 23, மார்க் சேப்மன் 6, சான்ட்னர் 1 ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் மிட்சேலும் 130 (127) ரன்களில் அவுட்டானதால் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுபுறம் 243/4 என்ற வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்தை 300 ரன்கள் தொடவிடாமல் கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 274 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை 4 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (40) ரன்களில் அவுட்டாக்கிய பெர்குசன் மறுபுறம் தடுமாறிய கில்லையும் 26 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அந்த நிலைமையில் களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த விராட் கோலியுடன் 3வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயரை 33 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் காலி செய்தார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து வந்த ராகுல் 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 27 ரன்களில் சான்ட்னர் சுழலில் சிக்கினார். ஆனால் அப்போது வந்த சூரியகுமார் யாதவ் சிங்கிள் எடுக்க விராட் கோலியுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் 2 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றது இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கியது. ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி 50 ரன்கள் கடந்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

மறுபுறம் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 95 (104) ரன்களில் ஆட்டமிழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை தவற விட்டார். இறுதியில் ஜடேஜா 39* (43) ரன்கள் எடுத்ததால் 48 ஓவரில் 274/6 ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தொடர்ச்சியான 5வது வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க: இப்படியும் மேட்ச் நிக்குமா? வினோத காரணத்தால் நிறுத்தப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து போட்டி

இதன் வாயிலாக ஐசிசி தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக சந்தித்த தொடர் அவமான தோல்விகளை நிறுத்தியுள்ள இந்தியா 2003க்குப்பின் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது. அதனால் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பெர்குசன் 2 விக்கெட்டுகளை எடுத்தும் முதல் தோல்வியை சந்தித்தது.

Advertisement