இப்படியும் மேட்ச் நிக்குமா? வினோத காரணத்தால் நிறுத்தப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து போட்டி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு டேவோன் கான்வே 0, வில் எங் 17, டாம் லாதம் 5, கிளன் பிலிப்ஸ் 23, மார்க் சாப்மேன் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டார்ல் மிட்சேல் சதமடித்து 103 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்து நியூசிலாந்துக்கு கை கொடுத்தனர்.

- Advertisement -

நிறுத்தப்பட்ட போட்டி:
இருப்பினும் அவர்களுடைய சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 243/4 என்ற வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்தை 50 ஓவர்களில் ஆல் அவுட் செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்களை சாய்ந்தார். அதை தொடர்ந்து 274 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை 46 (40) ரன்களில் அவுட்டாக்கிய பெர்குசன் மறுபுறம் தடுமாறிய கில்லை 26 ரன்களில் காலி செய்தார்.

அதனால் 76/2 என தடுமாறிய இந்தியாவை விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நங்கூரமாக விளையாடி சரிவிலிருந்து காப்பாற்ற முயற்சித்தனர். அவர்களுடைய நிதானமான ஆட்டத்தால் இந்தியா 100/2 ரன்கள் எடுத்திருந்த போது தர்மசாலா மைதானத்தில் திடீரென அதிகப்படியான பனிமூட்டம் வந்ததால் பந்தை பார்க்க முடியாமல் இரு அணி வீரர்களும் தடுமாறினார்கள்.

- Advertisement -

குறிப்பாக நியூசிலாந்து அணியினர் பவுண்டரி எல்லையில் இருந்து பந்தை பார்த்து சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியவில்லை என்று நடுவர்களிடம் புகார் செய்தனர். அதன் காரணமாக போட்டி 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு வினோதமாக அமைந்தது. ஏனெனில் இதற்கு முன் நாய்கள், பறவைகள், தேனீக்கள், சூரிய வெளிச்சம், இடி மின்னல் போன்ற பல்வேறு அம்சங்களால் போட்டி தடை பெற்றதை பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க: இவரையா இவ்வளவு நாள் டீம்ல எடுக்காம இருந்தீங்க? தெறிக்கவிட்ட முகமது ஷமி – இனிமே அவரோட ரிட்டர்ன் கஷ்டம் தான்

ஆனால் தர்மசாலா மைதானம் கடல் மட்டத்திலிருந்து 1317 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலைப்பகுதிகளில் இருப்பதால் திடீரென மேகக்கூட்டங்களும் பனிமூட்டங்களும் தரை பகுதிக்கு வந்ததால் இப்போட்டி நிறுத்தப்பட்டது வினோதமாக அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் 15 நிமிடங்களுக்கு மேல் பனி விலகியதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஸ்ரேயாஸ் 33 ரன்களில் அவுட்டானார். அதனால் சற்று முன் வரை 30 ஓவரில் 168/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் விராட் கோலி மற்றும் ராகுல் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

Advertisement