ஆடவர் அணிக்கு பாடம் கற்பித்த இளம் சிங்கப்பெண்கள் அணி – ஐசிசி வில்லனை சாய்த்து உலக கோப்பை ஃபைனலுக்கு தகுதி

Womens Under 19
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அசத்த போகும் சூப்பர் ஸ்டார்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் அண்டர்-19 உலகக்கோப்பை கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யுவராஜ் சிங் முதல் விராட் கோலி வரை ஏராளமான நட்சத்திரங்களை அடையாளப்படுத்திய அத்தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் இளம் வீரர்களின் அடையாளமாகவும் மாறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட்டிலும் அந்த உலகக் கோப்பையை முதல் முறையாக இந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலிருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக துவங்கியது.

அதில் 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் லீக் சுற்று நடைபெற்றது. அந்த வகையில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய மகளிர் அணிக்கு ஏற்கனவே தனது 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி லேடி சேவாக் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்த இளம் வீராங்கனை ஷபாலி வர்மா கேப்டனாக தலைமை தாங்கினார்.

- Advertisement -

பைனலில் இந்தியா:
அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா அதன்பின் அமெரிக்கா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளையும் தோற்கடித்து குரூப் டி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா இலங்கைக்கு எதிரான கடைசி வாய்ப்பில் அந்த அணியை 59/9 ரன்களுக்கு சுருட்டி பின்னர் 7.2 ஓவரிலேயே 60/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் கூடுதல் ரன்ரேட் பெற்ற இந்தியா அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. சென்வாஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் போராடி 107/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக ஃபிலிம்மர் 35 (32) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பர்சவி சோப்ரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 108 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா 10 (9) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த சௌமியா திவாரி 22 (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செராவத் 10 பவுண்டரிகளுடன் அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 61* (45) ரன்கள் குவித்தார். அதனால் 14.2 ஓவரிலேயே 110/2 ரன்கள் எடுத்த இந்திய அணி 2023 ஐசிசி அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

சமீப காலங்களில் ஆடவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டியில் தோற்ற இந்தியா ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்ததை மறக்கவே முடியாது. குறிப்பாக 2019 உலகக் கோப்பை அரை இறுதியில் தோனி ரன் அவுட்டான போதும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோற்ற போது விராட் கோலி கலங்கிய கண்களுடன் நின்றதை இப்போது நினைத்தாலும் இந்திய ரசிகர்கள் கலங்குவார்கள். மேலும் 2000ஆம் ஆண்டு நாக்-அவுட் உலகக் கோப்பை பைனலில் கங்குலி தலைமையிலான இந்தியாவை நியூசிலாந்து தோற்கடித்தது.

- Advertisement -

மொத்தத்தில் ஐசிசி தொடர்கள் என்று வந்தாலே நியூசிலாந்திடம் இந்தியா காலம் காலமாக மண்ணை கவ்வி வருகிறது. ஆனால் அதை மகளிர் கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறைக்கு முன்பாக இந்த தொடரில் வேரிலேயே அறுத்துள்ள இந்திய மகளிர் அணியினர் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் அண்டர்-19 மகளிர் டி20 உலக கோப்பையின் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: IND vs NZ : முதல் டி20 போட்டியில் பிரிதிவி ஷா’க்கு வாய்ப்பில்லை – அவங்க தான் ஓப்பனிங், பாண்டியா அதிரடி அறிவிப்பு

இதை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. வரலாற்றில் சீனியர் மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாத இந்தியா அந்த கதைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement