ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 29வது லீக் போட்டியில் வலுவான நடப்பு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் இங்கிலாந்து தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற வலுவான இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிய நிலையில் எதிர்புறம் சுப்மன் கில் 9, விராட் கோலி 0, ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 40/3 என சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 39 ரன்களில் போராடி அவுட்டானார்.
மாஸ் வெற்றி:
அடுத்த சில ஓவர்களிலேயே அபாரமாக பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த ரோஹித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (101) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த ரவீந்திர ஜடேஜாவும் 8 ரன்களில் அவுட்டானதால் 200 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது சூரியகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி 49 ரன்கள் குவித்தார்.
அவருடன் பும்ரா 16, குல்தீப் 9* ரன்கள் எடுத்த போதிலும் 50 ஓவர்களில் 229/9 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3, கிறிஸ் ஓக்ஸ் 2, அடில் ரசித் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 230 என்ற எளிதான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு டேவிட் மாலனை 16 ரன்களில் போல்ட்டாக்கிய பும்ரா அடுத்து வந்த ஜோ ரூட்டையும் கோல்டன் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.
அதே வேகத்தில் அடுத்ததாக வந்த பென்ஸ ஸ்டோக்ஸை போல்ட்டாக்கிய முகமது ஷமி மறுபுறம் நிதானத்தை காட்ட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 14 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 39/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இங்கிலாந்தை காப்பாற்ற முயற்சித்த கேப்டன் பட்லர் 10 ரன்களில் மாயாஜால சுழலால் கிளீன் போல்டான நிலையில் மொய்ன் அலியும் 15 ரன்களில் ஷமி வேகத்தில் அவுட்டானார்.
இறுதியாக காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட லியம் லிவிங்ஸ்டனும் 27 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 34.5 ஓவரிலேயே 129 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. அதனால் தொடர்ந்து 6 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்காவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, பும்ரா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை சாய்த்தனர்.
இதையும் படிங்க: ஒரே போட்டியில் ஜோடியாக மோசமான சாதனையில் இணைந்த விராட் கோலி மற்றும் ஜோ ரூட் – இதுதான் முதல் முறையாம்
மேலும் இதன் வாயிலாக ஐசிசி தொடரில் 2019 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை போன்ற தோல்விகளுக்கு பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா அசத்தியது. அது போக ரோகித் சர்மா கேப்டனாக வழி நடத்திய இந்த 100வது போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.