அண்டர்-19 உ.கோ 2024 : வெறும் 167 ரன்ஸ்.. வம்பிழுத்த வங்கதேசத்தை வசமாக செய்த இளம் இந்திய படை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் அசத்தப்போகும் தரமான வீரர்களை இப்போதே உலகிற்கு அடையாளப்படுத்தும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஜனவரி 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டி ப்ளோம்போண்டின் நகரில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு துவக்க வீரர் அர்சின் குல்கரணியை 7 ரன்னில் அவுட்டாக்கிய மரூப் மிருந்தா அடுத்ததாக வந்த முசிர் கானையும் 3 ரன்களில் பெவிலியன் திருப்பினார். அதனால் 31/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கேப்டன் உதய் சஹரன் மற்றொரு துவக்க வீரர் ஆதர்ஷ் சிங்குடன் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்ய முயற்சித்தார்.

- Advertisement -

அதிரடி வெற்றி:
அந்த வகையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இந்தியாவை 100 ரன்கள் தாண்ட வைத்து போராடியது. அப்போது 25வது ஓவரை வீசிய வங்கதேச வீரர் ஆரிஃபுல் இஸ்லாம் வீசிய ஒரு பந்தை உதய் அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர் விளாச முயற்சித்து சிங்கிள் எடுத்தார். அதனால் சற்று கடுப்பான ஆரிஃபுல் சில வார்த்தைகளை தெரிவித்து வம்பிழுத்தார்.

அதற்கு இந்திய கேப்டனும் பதிலடி கொடுக்க முயற்சித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து நடுவர்கள் உள்ளே புகுந்து சண்டையை தடுத்து நிறுத்தினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆதர்ஷ் சிங் அரை சதம் கடந்து 76 (96) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் அவருடன் விளையாடிய உதய் 64 (94) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து பிரியான்சு மோலியா 23, ஆரவெல்லி அவினாஷ் 23, சச்சின் டாஸ் 26* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா 251/7 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மரூப் மிருந்தா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 252 ரன்களை துரத்திய வங்கதேசம் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்க பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 45.5 ஓவரில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: 2012இல் தூஸ்ரா பந்துகளை அப்படி தான் அடிச்சேன்.. அஷ்வினை சாய்க்க இங்கிலாந்துக்கு.. பீட்டர்சன் ஆலோசனை

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆரிஃபுல் இஸ்லாம் 41, முகமது ஜேம்ஸ் 54 ரன்கள் எடுக்க பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4, முசிர் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2024 அண்டர்-19 உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக வம்பிழுத்த வங்கதேச அணியினருக்கு சரியான பதிலடி கொடுத்த இளம் இந்திய அணியினர் இந்த தொடரில் கோப்பையையும் நடப்பு சாம்பியன் அந்தஸ்தையும் தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

Advertisement