
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. 2007 முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி சில மகத்தான வரலாற்றை வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த வரிசையில் 2007 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த விதத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.
ஆம் அந்தத் தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை பவுல் அவுட் முறையில் வீழ்த்தி யுவராஜ் சிங் அதிரடியால் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை நாக் அவுட் செய்து செமி ஃபைனலுக்கு சென்றது. அந்த நிலையில் 2007 செப்டம்பர் 22ஆம் தேதி டர்பன் நகரில் ஆஸ்திரேலியாவை 2வது செமி ஃபைனலில் இந்தியா எதிர்கொண்டது. அதே வருடத்தில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பையில் எதிரணிகளை ஓடவிட்ட ஆஸ்திரேலியா ஒருதலைப்பட்சமாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
பொய்யாக்கிய இந்தியா:
அதனால் அப்போட்டியில் அனுபவமற்ற தோனி தலைமையிலான இந்திய அணியை ஆஸ்திரேலியா அசால்ட்டாக வீழ்த்தும் என்று ஒரு இந்தியரான ரவி சாஸ்திரி கணித்திருந்தார். அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கெளதம் கம்பீர் 24, சேவாக் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக வந்த யுவ்ராஜ் சிங் ஆஸ்திரேலியர்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினார்.
எதிர்புறம் தடுமாறிய உத்தப்பா 34 (28) ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சரவெடியாக வெளுத்து வாங்கி மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய யுவராஜ் சிங் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70 (30) ரன்கள் குவித்தார். இறுதியில் கேப்டன் தோனி 36 (18) ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 22 (13) ரன்கள் விளாசி சவாலை கொடுத்த போது ஸ்ரீசாந்த் கிளீன் போல்ட்டாக்கினார்.
அதே போல மறுபுறம் அதிரடியாக 62 (47) ரன்கள் குவித்த ஹைடன் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். ஆனால் அவரையும் சரியான நேரத்தில் கிளீன் போல்ட்டாக்கிய ஸ்ரீசாந்த் அதை தரையில் கைகளால் அடித்து வெறித்தனமாக கொண்டாடியதை இப்போது நினைத்தாலும் ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். அப்படியே மறுபுறம் தடுமாறிய பிராட் ஹோட்ஜ்ஜை 11 (10) ரன்களில் அவுட்டாக்கிய இர்பான் பதான் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய ஆண்ட்ரூ சைமன்ஸை 43 (26) ரன்களில் போல்ட்டாக்கினார்.
அடுத்து வந்த மைக்கேல் ஹஸி 13, மைக்கேல் கிளார்க் 3 ரன்களில் அவுட்டானதால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 173/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு வலுவான ஆஸ்திரேலியாவை தரமான பந்து வீச்சால் அடக்கிய இந்தியா சார்பில் ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ஜோஹிந்தர் சர்மா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் நாக் அவுட்டில் சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க: 10 வயசு கனவு.. இந்தியாவுக்கு விளையாடும் சான்ஸ் கிடைக்காதது பற்றி கவலையில்லை.. ரியான் பராக் பேட்டி
அப்போட்டி முடிந்ததும் “இந்தியா தோற்கும் என்று சொன்ன உங்களுடைய கருத்தை என்னுடைய பசங்க பொய்யாக்கிட்டாங்க” என்று பேட்டி எடுத்த ரவி சாஸ்திரியிடம் நேருக்கு நேராக தோனி சொன்னதெல்லாம் மாஸ் வரலாறாகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இறுதிப் போட்டியிலும் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.