ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் சிறப்பாக விளையாடிய சிவம் துபே போன்ற சில வீரர்களுக்கு அடுத்ததாக நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரர் ரியான் பராக் தனது கேரியரிலேயே முதல் முறையாக அற்புதமாக செயல்பட்டார்.
கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 2023 வரை மிகவும் மோசமாக செயல்பட்டு ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்தார். இருப்பினும் இவரிடம் ஏதோ திறமை இருப்பதாக உணர்ந்த ராஜஸ்தான் நிர்வாகம் தக்க வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது. அந்த வரிசையில் இந்த வருடம் அவருக்கு 4வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ரியான் பராக் நம்பிக்கை:
அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி 16 போட்டிகளில் 573 ரன்கள் குவித்த ரியான் பராக் இந்த வருடம் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி மற்றும் ருதுராஜுக்கு அடுத்தபடியாக 3வது இடம் பிடித்தார். அத்துடன் ஜெய்ஸ்வாலுக்கு (625 ரன்கள்) பின் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அதனால் விரைவில் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு கிடைக்காதது பற்றி கவலையில்லை என்று ரியான் பராக் கூறியுள்ளார். ஏனெனில் தம்முடைய திறமைக்கு நிச்சயம் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் என்னை எடுப்பீர்கள் தானே? அதுவே என்னுடைய நம்பிக்கையாகும். கண்டிப்பாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் எப்போது என்று நான் கவலைப்படப் போவதில்லை. நான் ரன்கள் அடிக்காத சமயங்களில் கொடுத்த பேட்டிகளில் கூட இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறியிருந்தேன்”
இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்
“இது என்னுடைய தன்னம்பிக்கையே தவிர திமிர்த்தனம் கிடையாது. இந்த திட்டத்துடன் தான் எனது அப்பாவுடன் சேர்ந்து நான் 10 வயதில் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கினேன். எப்போதாவது நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். அது அடுத்த சுற்றுப்பயணத்திலா, அடுத்த 6 மாதத்திலா, அடுத்த வருடத்திலா என்பது தெரியாது. களத்தில் விளையாடும் போது இவற்றை நான் எடுத்துக் கொள்வதில்லை. அது தேர்வுக் குழுவினரின் வேலை” என்று கூறினார்



