டி20 உ.கோ 2024 : இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

IND vs PAK
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் சவாலை கொடுக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில் 2022 டி20 உலகக் கோப்பை முதல் 2023 உலகக் கோப்பை வரை படுதோல்விகளை மட்டுமே சந்தித்த பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுவே பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தரமான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்றொரு கீப்பர் அசாம் கான் தனது சுமாரான ஃபிட்னஸ் போலவே பேட்டிங்கிலும் இதுவரை அசத்தியதில்லை. அதே போல ஃபக்கார் ஜமான் தவிர்த்து பேட்டிங் துறையில் இடம் பிடித்துள்ள சாய்ம் ஆயுப், உஸ்மான் கான் ஆகியோர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்த அனுபவத்தை கொண்டிருக்கவில்லை.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:
அத்துடன் சுமாரான ஃபார்மில் இருந்தாலும் கூட ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாதது பெரிய பின்னடைவாகும். அதே போல இன்னும் பாகிஸ்தான் அணி ஒரு தரமான ஸ்பின்னரை கண்டறியவில்லை என்பது ஆச்சரியமாகும். ஏனெனில் இளம் வீரர் அப்ரார் அஹ்மத் இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு அனுபவமற்றவராகவே இருக்கிறார்.

இப்திகார் அஹ்மத், சடாப் கான், ஓய்விலிருந்து வந்துள்ள இமாத் வாசிம் ஆகிய ஆல் ரவுண்டர்கள் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய ஸ்பின்னர்களாக இல்லை. மேலும் பெரிய போட்டிகளில் இவர்கள் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறுகின்றனர். இறுதியாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி கடந்த 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் எடுபடவில்லை.

- Advertisement -

இது போக பாபர் அசாம் – ரிஸ்வான் ஆகியோர் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட தவறுவது பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. அத்துடன் அவர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினால் பாகிஸ்தானின் பேட்டிங் பலமுறை சீட்டுக்கட்டாக சரிந்ததை பார்த்துள்ளோம். மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் அனுபவமும் இளமையும் கலந்த அதிரடி ஓப்பனிங் ஜோடியாக இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றனர்.

3வது இடத்தில் எப்போதும் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழக்கூடிய விராட் கோலியும் 4வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமாரும் பலம் சேர்க்கின்றனர். அதே போல சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகிய விக்கெட் கீப்பர்கள் 2024 ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளனர். அதைத் தொடர்ந்து ஹர்டிக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருந்தாலும் கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தியுள்ளார்.

- Advertisement -

அவருடன் சிவம் துபே ஃபினிஷராக செயல்பட காத்திருக்கும் நிலையில் குல்தீப் யாதவ், சஹால் ஆகியோர் தரமான ஸ்பின்னர்களாக இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றனர். அத்துடன் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் சடாப் கான், இமாத் வாசிம் ஆகிய பாகிஸ்தான் ஆல் ரவுண்டர்களை விட தரத்திலும் அனுபவத்திலும் உயர்ந்து நிற்கின்றனர். இறுதியாக பும்ரா, சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுக்கும் தரத்தை கொண்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் ஒரு நாளில் கத்துக்குட்டியிடம் தோற்கக்கூடிய பாகிஸ்தான் மறுநாளில் வலுவான ஆஸ்திரேலியாவையே வீழ்த்தக்கூடிய கணிக்க முடியாத அணியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சமீப காலங்களில் கத்துக்குட்டிகளிடமே அந்த அணி தடுமாறி வருகிறது. மறுபுறம் உலகக் கோப்பையில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மட்டுமல்ல அவரோடு சேர்ந்து மற்றொரு வீரரும் மும்பை அணியில் இருந்து வெளியேறுவார் – ஆகாஷ் சோப்ரா

எனவே அந்த எக்ஸ்ட்ரா உத்வேகத்துடன் இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கான தரம் இந்திய அணியிடம் இருக்கிறது. வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 12 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 9 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் வென்றது

Advertisement