IND vs AUS : மீண்டும் மண்ணை கவ்விய நம்பர் ஒன் அணி – 10 வருடமாக ஆஸ்திரேலியாவை அடக்கி ஆளும் இந்தியா

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றதால் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலியா பிப்ரவரி 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 263 ரன்கள் சேர்த்தது.

டேவிட் வார்னர் 15, மார்னஸ் லபுஸ்ஷேன் 18, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் 12, அலெக்ஸ் கேரி 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 வீக்கெட்டுகளும் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

அடக்கிய இந்தியா:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மாவை 32 ரன்களிலும் கேஎல் ராகுலை 17 ரன்களிலும் காலி செய்த நேதன் லயன் 100வது போட்டியில் களமிறங்கிய புஜாராவை டக் அவுட்டாக்கி ஸ்ரேயாஸ் ஐயரை 4 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதனால் ஏற்பட்ட சரிவை சரி செய்ய போராடிய விராட் கோலி 44 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 26 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் 139/7 என இந்தியா மேலும் சரிந்தது.

ஆனால் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் படேல் 74 ரன்களும் அஷ்வின் 37 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். அதனால் 100 முன்னிலை கொடுக்க வேண்டிய இந்தியா 262 ரன்களுக்கு அவுட்டாகி வெறும் 1 மட்டுமே பின்தங்கியது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 6 ரன்னில் அவுட்டானாலும் டிராவிஸ் ஹெட் அதிரடி காட்டியதால் 2வது நாள் முடிவில் 61/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் இன்று துவங்கிய 3வது நாளில் 43 ரன்கள் குவித்து சவால் கொடுத்த அவரை அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்தை 9 ரன்களில் காலி செய்தார். அப்போது ஓரளவுக்கு தாக்குப்பிடித்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 35 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் மாட் ரென்ஷா 2, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 0, அலெஸ் கேரி 7 என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதனால் ஆஸ்திரேலியாவை வெறும் 113 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை சாய்ந்து மிரட்டினார். இறுதியில் 115 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தடவல் நாயகன் ராகுல் மீண்டும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் 3 பவுண்டரி 2 சிக்சரை விளாசி அதிரடி காட்டிய ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 31 (20) ரன்களில் ரன் அவுட்டானார். அந்த சமயத்தில் வந்த விராட் கோலி நங்கூரத்தை போட முயற்சித்தாலும் மீண்டும் 20 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சித்து 12 (10) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி மறுபுறம் நங்கூரமாக நின்ற புஜாரா 31* ரன்களும் அடுத்து வந்த கே எஸ் பரத் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23* (22) ரன்களும் எடுத்ததால் 118/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 2 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்து ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

மேலும் கடைசி 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் இந்தியா இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்றுள்ளதால் மீண்டும் அந்த கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் ஆஸ்திரேலியா கடைசியாக கடந்த 2014/15இல் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை வென்றிருந்தது.

இதையும் படிங்க: கடைசி 50 வருஷத்துல கும்ப்ளேவுக்கு அடுத்து இந்த சாதனையை செய்யும் 2 ஆவது வீரர். ஜடேஜா தானாம் – வரலாற்று சாதனை

அடுத்ததாக இந்த கோப்பை 2024/25இல் நடைபெறுவதால் கடந்த 10 வருடங்களாக கிரிக்கெட்டின் அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தோற்கடித்து அடக்கி ஆளும் இந்திய அணி இந்திய ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. அதனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து 4 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது.

Advertisement