அவர் கேப்டனா இருந்தா இந்தியா தோத்துருக்காது.. ரோஹித் ஸ்விட்ச் ஆஃப் ஆகிட்டாரு.. மைக்கேல் வாகன் விமர்சனம்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா நம்ப முடியாத தோல்வியை சந்தித்தது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதனால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 2வது இன்னிங்ஸில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பரிதாபமாக தோற்றது.

அதன் வாயிலாக 92 வருடங்களில் சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்ற ஒரு போட்டியில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக அந்தப் போட்டியில் 2வது இன்னிங்ஸில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

ரோஹித் ஸ்விட்ச் ஆஃப்:
குறிப்பாக 164/5 என சரிந்து தடுமாறிய இங்கிலாந்து கடைசியில் 420 ரன்கள் அடிக்கும் அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதை பயன்படுத்தி 9, 10வது இடங்களில் களமிறங்கிய ரெஹன் அஹமத், டாம் ஹார்ட்லி போன்ற டெயில் எண்டர்கள் முக்கிய ரன்கள் எடுத்து இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.

இந்நிலையில் முதல் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக ரோஹித் சர்மா ஸ்விட்ச் ஆஃப் ஆனது போல் தடுமாறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை அதிகமாக தவற விடுகிறது. கடந்த வாரம் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா கண்டிப்பாக முதல் போட்டியில் தோற்றிருக்காது. ரோகித் சர்மா மகத்தான ஜாம்பவான் வீரர். ஆனால் கேப்டனாக அவர் முற்றிலும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டதாக நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: எப்படியாவது ஜெயிச்சுடுங்க இந்தியா.. இல்லனா என்னோட ரெகார்ட் உடைஞ்சுரும்.. நாசர் ஹுசைன் வேடிக்கை பதிவு

அதே போல 37 வயதாகும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் காலத்தை கடந்து விட்டதாக மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement