
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் ஒன்பதாம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 19வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மாவும் 13 (12) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவிற்கு ரிசப் பண்ட் அதிரடியாக விளையாடினார்.
மெகா சொதப்பல்:
ஆனால் அவருக்கு நிதானமாக விளையாடி கை கொடுக்க முயற்சித்த அக்சர் பட்டேல் 20 (18) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து வந்த சிவம் துபே திண்டாட்டமாக விளையாடி 3 (9) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை உண்டாக்கினார்.
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நம்பிக்கை கொடுத்த ரிஷப் பண்ட்டும் 42 (31) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த ரவீந்திர ஜடேஜா கோல்டன் டக் அவுட்டாகி இந்திய அணியை காலை வாரினர். இருப்பினும் எதிர்ப்புறம் களமிறங்கியிருந்த ஹர்திக் பாண்டியா இந்தியாவை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி 7 (12) ரன்னில் திரும்பினார்.
இறுதியில் அர்ஷ்தீப் சிங் 9, சிராஜ் 7* ரன்கள் எடுத்தும் 19 ஓவரில் இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டாகி இந்தியா அவமான சாதனை படைத்தது. அத்துடன் இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையிலும் டி20 கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா 2 மோசமான சாதனை படைத்தது.
இதையும் படிங்க: ரோஹித்தின் தேவையற்ற முடிவால்.. பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுக்கு வந்த விராட் கோலியின் 12 வருட வீரநடை
குறிப்பாக 89/3 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா 150 ரன்கள் கூட தொடாமல் மேற்கொண்டு 38/7 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியது. அந்தளவுக்கு பந்து மிரட்டிய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக முகமது அமீர் 2, ஹரிஷ் ரவூப் 3, நாசீம் ஷா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.