ரோஹித்தின் தேவையற்ற முடிவால்.. பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுக்கு வந்த விராட் கோலியின் 12 வருட வீரநடை

Virat Kohli vs PAK 24
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 19வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் கொஞ்சம் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக சிக்சரை பறக்க விட்ட ரோஹித் சர்மா இந்தியாவின் ஆட்டத்தை அற்புதமாக தொடங்கினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய விராட் கோலி 2வது ஓவரின் 3வது பந்தில் நாசிம் ஷா வேகத்தில் கேட்ச் கொடுத்து 4 (3) ரன்களில் அவுட்டானது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

12 வருட வீரநடை:
ஏனெனில் உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே விராட் கோலி சிம்ம சொப்பனமாக திகழக்கூடியவர். சொல்லப்போனால் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 82* ரன்கள் அடித்து காப்பாற்றிய அவர் பாகிஸ்தானுக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்று 4 ரன்களில் அவுட்டான அவர் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானார்.

கடந்த 2012இல் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி 78* ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியின் பங்காற்றினார். அதைத் தொடர்ந்து 2014இல் 36*, 2016இல் 55* ரன்கள் அடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே போல 2021இல் அவர் 57 ரன்கள் எடுத்தும் முதல் முறையாக இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது. ஆனால் 2022இல் மீண்டும் 82* ரன்கள் அடித்த விராட் கோலி இந்தியாவுக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் இன்று முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் அவருடைய வீரநடை முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் கடந்த போட்டிகளில் 3வது இடத்தில் களமிறங்கி அசத்திய அவர் இம்முறை துவக்க வீரராக களமிறங்கி முதல் முறையாக ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார்.

இதையும் படிங்க: நான் மட்டும் இந்தியாவுக்காக அந்த ஃபைனலில் விளையாடிருந்தா.. நிலைமை வேற மாதிரி இருந்துருக்கும்.. ரிஷப் பண்ட்

அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ஓப்பனிங் வீரராக விராட் கோலியை இறக்கிய முடிவே இதற்கு காரணம் என்று சொல்லலாம். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அக்சர் பட்டேலும் 20 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் சற்று முன் வரை இந்தியா 10 ஓவரில் 81/3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரிஷப் பண்ட் 34*, சூர்யகுமார் 5* ரன்களுடன் போராடி வருகின்றனர்.

Advertisement