வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதிலும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் இறுதிக்கட்ட பயணத்தில் 2019க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை சந்தித்த இந்தியா பின்னடைவுக்குள்ளாகி விமர்சனங்களையும் சந்தித்தது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் ஓய்வெடுத்ததால் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றத் தவறிய இளம் வீரர்கள் 90/0 என்ற நல்ல துவக்கம் கிடைத்தும் சொதப்பலாக செயல்பட்டு 181 ரன்களுக்கு சுருண்டது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.
எனவே 2023 உலக கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி பாதையில் நடப்பதற்கு இத்தொடரை வெல்ல 3வது போட்டியை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியாவுக்கு ரோஹித் போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் 2வது போட்டியில் கிடைத்த மறுமலர்ச்சி வெற்றியை பயன்படுத்தி 3வது போட்டியிலும் வென்று தொடரை வெல்ல போராட உள்ளது.
பிரையன் லாரா மைதானம்:
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு ட்ரினிடாட் நகரில் இருக்கும் பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் துவங்குகிறது. மகத்தான வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா பெயரில் அவருடைய சொந்த ஊரில் கடந்த 2007இல் 15,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 1 சர்வதேச போட்டி மட்டுமே நடந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2022இல் முதல் முறையாக இங்கு நடைபெற்ற டி20 போட்டியில் ரோஹித் சர்மா 64, தினேஷ் கார்த்திக் 41* ரன்கள் எடுத்த உதவியுடன் வெஸ்ட் இண்டீஸை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது தான் முதல் முறையாக இங்கு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ட்ரினிடாட் நகரில் போட்டி நாளன்று சராசரியாக 60% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி காலை நேரத்தில் 30% என்றளவில் இருக்கும் மழையின் அளவு 1, 2 மணி வாக்கில் 60% இடியுடன் கூடிய மழையாக செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
இருப்பினும் 3 மணிக்கு மேல் படிப்படியாக குறையும் மழை மாலை வேளையில் முற்றிலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே கடந்த போட்டியை போலவே இப்போட்டியும் மழையின் குறுக்கீட்டுக்கு மத்தியில் முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளைப் போலவே இப்போட்டி நடைபெறும் மைதானமும் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இதுவரை ஒருநாள் போட்டிகள் நடைபெற்றதில்லை என்ற நிலைமையில் இதற்கு முன் இந்த மைதானத்தில் நடைபெற்ற 34 கரீபியன் டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 141 ரன்களாகும்.
சொல்லப்போனால் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா எடுத்த 190/6 ரன்களே இங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோராகும். அந்தளவுக்கு பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் மழைக்கான வாய்ப்பிருப்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய சவாலை கொடுப்பார்கள். அதே போல போட்டி நடைபெற நடைபெற ஸ்பின்னர்கள் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பிடித்த 2 சி.எஸ்.கே வீரர்கள் – ரசிகர்கள் மகிழ்ச்சி
எனவே சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நிதானமாக செயல்பட்டு செட்டிலானால் இந்த மைதானத்தில் இருக்கும் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை குவிக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த மைதானத்தில் 250 ரன்களுக்கு மேல் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம். மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றியை கொடுக்கலாம்.