இந்தியா – இலங்கை மோதும் வான்கடே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Wankhede Stadium
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் 6 வெற்றிகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% சதவீதம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய 7வது போட்டியில் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தவிக்கும் இலங்கையை எதிர்கொள்கிறது.

அதில் ஹஸரங்கா, சனாக்கா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் இல்லாமல் தடுமாறி வரும் இலங்கை கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அந்தளவுக்கு சுமாராக செயல்படும் அந்த அணியை 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் தோற்கடித்ததை போலவே இப்போட்டியிலும் வீழ்த்தி இந்தியா செமி ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வான்கடே மைதானம்:
மறுபுறம் இப்போட்டியில் தோற்று லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதை தவிர்க்க இலங்கை போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 2ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருக்கிறது. கடந்த 1974இல் உருவாக்கப்பட்டு 32,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1987 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் இதுவரை நடைபெற்றுள்ள 25 போட்டிகளில் 20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 11 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக இங்கு விளையாடிய 3 போட்டிகளில் 2011 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட இந்தியா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இலங்கை 1 வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த மைதானத்தில் அதிக ரன்கள் (455) அடித்த வீரராக இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அதிக விக்கெட்களை (15) எடுத்த வீரராக இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்தும் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் தென்னாப்பிரிக்கா : 438/4, இந்தியாவுக்கு எதிராக, 2015.

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 2ஆம் தேதி மும்பை நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என நம்பலாம். அதே சமயம் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
வான்கடே மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா முறையே 399, 382 ரன்கள் அடித்து நொறுக்கி வெற்றி கண்டதையும் மறக்க முடியாது. இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 256 ரன்களாக இருக்கிறது.

எனவே இங்குள்ள பிட்ச் இப்போட்டியிலும் ஃபிளாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி நங்கூரமாக நின்றால் பெரிய ரன்களை எளிதாக அடிக்கலாம். அதனால் வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் நல்ல லைன், லென்த்தை பின்பற்றினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: 7 போட்டிகள்.. 3 வெற்றிகள்.. இன்னும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல – என்ன செய்ய வேண்டும்?

இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 12 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. மேலும் மும்பையில் பகல் நேரத்தில் அதிகப்படியான வெப்பம் நிலவும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement