IND vs SL : இந்தியா கோப்பை வெல்ல 3வது டி20 நடைபெறும் ராஜ்கோட் மைதானம் உதவுமா? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Rajkot Cricket Stadium
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றாலும் 2வது போட்டியில் போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வென்று 2024 டி20 உலக கோப்பை வெல்லும் பயணத்தில் வெற்றியுடன் பயணிக்க ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் கடைசி போட்டியிலும் வென்று ஆசிய கோப்பை போலவே இத்தொடரையும் வெல்ல இலங்கை தயாராகியுள்ளது.

எனவே 2வது போட்டியில் பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சொதப்பிய பாடத்தையும் பந்து வீச்சில் முதல் 10 ஓவர்களில் அதிரடியாக செயல்பட தவறியதால் கிடைத்த தோல்வி பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியா இந்தியா 3வது போட்டியில் கச்சிதமாக செயல்பட்டால் மட்டுமே சொந்த மண்ணில் தங்களை விட தரவரிசையில் கீழே இருக்கும் இலங்கையை தோற்கடித்து தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபிக்க முடியும்.

- Advertisement -

ராஜ்கோட் மைதானம்:
அந்த வகையில் இரு அணிகளும் வெற்றிக்காக போராட காத்திருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த 3வது போட்டி இரவு 7:00 மணிக்கு ராஜ்கோட் நகரில் இருக்கும் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானம் போல தனித்துவமான பால்கனியுடன் 28000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2013 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. அந்த வரிசையில் இதுவரை இங்கு 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றிகளையும் 1 தோல்வியும் சந்தித்துள்ளது. மேலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 2 வெற்றியையும் சேசிங் செய்த அணிகள் 2 வெற்றியும் பதிவு செய்துள்ளன. கடைசியாக கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இப்போது தான் முதல் முறையாக இலங்கையை இங்கு எதிர்கொள்கிறது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக ரோகித் சர்மா (98) உள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளராக யுஸ்வென்ற சஹால் (4) உள்ளார்.

3. இந்த மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த அணி : இந்தியா 202/4, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013. இந்த மைதானத்தில் வெற்றிகரமாக அதிக இலக்கை கட்டுப்படுத்திய அணி : 196/2 – நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிராக, 2017

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்: இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் பிளாட்டான பிட்ச் கொண்ட ஒரு மைதானம் என்றால் அது ராஜ்கோட் என்று சொல்லலாம். கடைசியாக இங்கு நடைபெற்ற போட்டியில் 169/6 ரன்களை குவித்த இந்தியா தென்னாப்பிரிக்காவை பந்து வீச்சில் 87 ரன்களுக்கு சுருட்டி 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் இங்கு பொதுவாக நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதனாலயே வரலாற்றில் இங்கு நடைபெற்ற 4 சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 180 ஆகும்.

அதே சமயம் பவுண்டரிகளின் எல்லையும் மிகவும் சிறியது என்பதால் இம்மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தி அதிக ரன்களை குவிப்பார்கள். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்து ஸ்விங் ஆகும் வரை தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். மேலும் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இம்மைதானத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் இப்போட்டியில் பனியின் தாக்கத்தை கருதி டாஸ் சொல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க: IND vs SL : வீடியோ : அதிவேகத்தில் தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக். பெயில்ஸ் எங்க போயிருக்கு பாருங்க – அசந்து போயிடுவீங்க

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று ராஜ்கோட் நகரில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் இரவு நேரத்தில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement