
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணியை 2வது போட்டியில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையை பெற இரு அணிகளும் தயாராகியுள்ளன.
அப்போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகவும் அழகிய மைதானங்களில் ஒன்றான தரம்சாலாவில் அப்போட்டி இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது. 2003ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 23000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அம்மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 10 சர்வதேச டி20 போட்டிகளில் 3இல் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகள் 1 தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு இம்மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதன் பின் இப்போது தான் அவ்விரு அணிகளும் இம்முறை மோதுகின்றன.
டிசம்பர் 14ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். போட்டி நடைபெறும் இரவு நேரங்களில் சராசரியாக 7 – 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
தர்மசாலா மைதானத்தின் பிட்ச் பேட்டிங், பேட்டிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. வேகம், பவுன்ஸ் ஆகியவை சீரான அளவில் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதே சமயம் குளிர்ச்சியான மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்வதற்கு உதவும்.
எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சவாலைக் கொடுக்கலாம். வரலாற்றில் இங்கு நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 152. இங்கு ஒருமுறை கூட 200 ரன்கள் அடிக்கப்பட்டதில்லை. 3 முறை 150க்கும் குறைவான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ
2 முறை 150 – 169, 2 முறை 170 – 190 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை மட்டுமே 199 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இங்கு முடிவு கிடைத்த 8 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 4 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எம்முடிவை தேர்ந்தெடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.