இந்தியா – தெ.ஆ அணிகள் மோதும் முதல் டி20 நடைபெறும் கிங்ஸ்மீட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Kingsmead Stadium Durban
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி இத்தொடரிலும் களமிறங்க உள்ளது. எனவே 2024 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரை இந்திய அணி வெல்வதற்கு போராடும் என்று நம்பலாம்.

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் தென்னாபிரிக்கா ஐடன் மார்க்கம் தலைமையில் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து இத்தொடரை வெல்ல தயாராகியுள்ளது. அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டர்பன் நகரில் இருக்கும் கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

கிங்ஸ்மீட் மைதானம்:
கடந்த 1923இல் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டுகளாக சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த பழமையான மைதானத்தில் 2007 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்றுள்ள 18 போட்டியில் தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஆனால் இம்மைதானத்தில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சமனில் முடிந்தும் இறுதியில் பவுல் அவுட் முறையில் இந்தியா வென்றதை மறக்க முடியாது. அதே போல இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து இந்தியா வென்ற போட்டியும் இம்மைதானத்தில் நடைபெற்ற பெருமைக்குரியதாகும்.

- Advertisement -

அந்த வகையில் மிகுந்த ராசியாகவும் இந்தியாவின் கோட்டையாகவும் திகழும் இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (129) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (70) பதிவு செய்த இந்திய வீரராக யுவராஜ் சிங் சாதனை படைத்துள்ளார். இங்கு டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராக ஆர்பி சிங், இர்பான் பதான் (தலா 7) ஆகியோரும் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரராக ஆர்பி சிங் (4/13) சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 218/4, இங்கிலாந்துக்கு எதிராக, 2007

பிட்ச் ரிப்போர்ட்:
கிங்ஸ்மீட் மைதானம் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும். எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதை சரியாக பயன்படுத்தும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதற்கு வெளிப்புற களங்கள் மிகவும் வேகமாக இருந்து அதிக கை கொடுக்கும்.

இதையும் படிங்க: நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

அதே சமயம் வேகத்தில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஸ்பின்னர்களும் மிடில் ஓவர்களில் சவாலை கொடுக்கலாம். இந்த மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் : 143. இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 8 முறை சேசிங், 9 முறை பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement