IND vs PAK : இந்தியா – பாக் போட்டி நடைபெறும் கண்டி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Pallekele Stadium
- Advertisement -

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் துவங்கி நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்த டாப் 2 அணிகளில் விராட் கோலி, பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம். அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி இலங்கையின் கண்டியின் இருக்கும் பல்லக்கேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 35,000 ரசிகர்கள் அமரும் வகையில் இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதுவரை 33 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இதுவரை 3 போட்டிகளில் களமிறங்கிய இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக 3 போட்டிகளிலும் இலங்கையை எதிர்கொண்டு வென்ற இந்தியா இப்போது தான் இங்கே முதல் முறையாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

- Advertisement -

பல்லக்கேல் மைதானம்:
மறுபுறம் இங்கு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (182), அதிக சதங்கள் (1), அதிகபட்ச ஸ்கோர் (124*) அடித்த இந்திய வீரராக ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (9) மற்றும் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக (5/27) ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 294/7 – இலங்கைக்கு எதிராக, 2012

பிட்ச் ரிப்போர்ட்:
இம்மைதானம் ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் சமீபத்திய இலங்கை பிரீமியர் லீக் தொடர் உட்பட சமீப காலங்களில் இங்கு பவுலர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக ஸ்பின்னர்கள் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிக விக்கெட்டுகளை எடுத்து சவாலை கொடுக்கின்றனர். எனவே நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பக்கட்ட சூழ்நிலைகளை சமாளித்து செட்டிலானால் பெரிய ரன்களை எடுக்கலாம்.

- Advertisement -

இந்த மைதானத்தில் சராசரி இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ஆகும். மேலும் இங்கு வரலாற்றில் நடைபெற்ற 33 போட்டிகளில் 18 முறை சேசிங் செய்த அணிகளும் 14 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம். எடுத்துக்காட்டாக நேற்று இங்கு நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த வங்கதேசம் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: IND vs PAK : நாளைய பாக் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச லிஸ்ட் இதோ

வெதர் ரிப்போர்ட்: இருப்பினும் இப்போட்டி நடைபெறும் பல்லக்கேல் நகரில் போட்டி நாளன்று சராசரியாக 80% இடியுடன் கூடிய மழை பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி துவங்கும் மதியம் 2 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 60 – 80% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் இப்போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. எனவே வருண பகவான் வழி விட வேண்டும் என்று இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் பிரார்த்திப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement