இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை இந்தியா சந்திக்கிறது. அதில் ஏற்கனவே வெளியேறிய நெதர்லாந்து ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
குறிப்பாக வலுவான தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த உத்வேகத்தை கொண்டுள்ள அந்த அணியில் ஸ்காட் எட்வர்ட்ஸ், பஸ் டீ லீடி, வேன் டெர் மெர்வி போன்ற தரமான வீரர்கள் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க முடிந்தளவுக்கு போராட உள்ளனர். மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளையே தோற்கடித்த இந்தியா இப்போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை கொடுக்கும் என்று நம்பலாம்.
பெங்களூரு மைதானம்:
ஏனெனில் இப்போட்டி நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 1969இல் தோற்றுவிக்கப்பட்டு 40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1982 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற 30 போட்டிகளில் 21 முறை விளையாடியுள்ள இந்தியா 14 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
1 போட்டி சமனிலும் 1 போட்டி மழையாலும் கைவிடப்பட்டது. இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (534) அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கரும் அதிகபட்ச ஸ்கோர் (209) பதிவு செய்த வீரராக ரோஹித் சர்மாவும் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (14) எடுத்த பவுலராக ஜாகிர் கானும் சிறந்த பவுலிங்கை (5/31) பதிவு செய்தவராக யுவராஜ் சிங்கும் சாதனை படைத்துள்ள நிலையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக நியூஸிலாந்து (401/6) ரன்கள் இருக்கிறது.
வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 12ஆம் தேதி பெங்களூரு நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் வானம் வழக்கமான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
பெங்களூரு மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை அனைவருமே அறிவோம். குறிப்பாக இங்குள்ள பவுண்டர்களின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால் நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடித்து நொறுக்கலாம். சொல்லப்போனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கே பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து 401/6 ரன்கள் குவித்தது. அதே போல 2011 உலகக் கோப்பையில் இங்கே இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து 326 ரன்களை சேசிங் செய்ததை மறக்க முடியாது.
இதையும் படிங்க: இந்தியா – நெதர்லாந்து போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்
அதனால் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பார்கள். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 14 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும் அல்லது பெரிய ஸ்கோரை சேசிங் செய்ய தயாராக இருக்க வேண்டும்.