இந்தியா – இங்கிலாந்து மோதும் லக்னோ மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் 5 வெற்றிகளை பதிவு செய்து கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து அசத்தி வருகிறது. அந்த வெற்றிப் பயணத்தில் அடுத்ததாக வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதில் அணிகளுக்கும் பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை 90% நழுவ விட்டுள்ளது.

குறிப்பாக கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்ற அந்த அணி பலவீனமான இலங்கையிடமும் 156 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதனால் ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்களை கொண்டுள்ள இங்கிலாந்து இனி தோற்பதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க தயாராகியுள்ளது.

- Advertisement -

லக்னோ மைதானம்:
மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இங்கிலாந்தையும் தோற்கடித்து இந்தியா தங்களுடைய வெற்றி நடையை தொடர போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி அக்டோபர் 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோவில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2007இல் தோற்றுவிக்கப்பட்டு 50,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் இதுவரை 7 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அதில் 1 போட்டியில் மட்டும் விளையாடியுள்ள இந்தியா 2022ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (86) அதிகபட்ச ஸ்கோர் (86) அடித்த இந்திய வீரராக சஞ்சு சாம்சனும் அதிக விக்கெட்கள் (2) மற்றும் சிறந்த பவுலிங்கை (2/35) பதிவு செய்த இந்திய வீரராக சர்தல் தாக்கூரும் உள்ளனர். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 240/8

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
லக்னோ மைதானத்தில் இருக்கும் பிட்ச் 2023 ஐபிஎல் தொடரிலும் சரி இதுவரை நடைபெற்ற சர்வதேச போட்டிகளிலும் சரி பெரும்பாலும் ஸ்பின்னர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. அதனால் இரு அணிகளின் ஸ்பின்னர்களும் மிடில் ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சுழலை நன்றாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் நங்கூரமாக நின்றால் கண்டிப்பாக பெரிய ரன்கள் அடிக்கலாம்.

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து போட்டியில் வெல்லபோவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

அதே சமயம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் இங்கு 229 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்ஸில் 213 ரன்களாக குறைகிறது. அத்துடன் வரலாற்றில் இங்கே நடைபெற்ற 7 போட்டிகளில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 4 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் இங்கு நடைபெற்ற 2 போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகள் வென்றன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement