IND vs ENG 2nd ODI : தொடரை கைப்பற்றுமா இந்தியா, லார்ட்ஸ் மைதான எப்படி? – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

Lords Stadium ENG vs NZ
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று லண்டனில் துவங்கியது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரின் எரிமலையான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு அவமானத்தைச் சந்தித்தது.

இறுதியில் 111 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 76*, ஷிகர் தவான் 31* ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 14-ஆம் தேதியன்று லண்டனில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:
சமீபத்திய டி20 தொடரை ஏற்கனவே இழந்த இங்கிலாந்து இந்த ஒருநாள் தொடரிலும் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளதால் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர்வதற்காக இப்போட்டியில் வென்றால் தான் தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ போன்ற முக்கிய வீரர்கள் இணைந்ததால் வலுவடைந்த போதிலும் வரலாற்று தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்த அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் இப்போட்டியில் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிக்காக போராட உள்ளனர்.

மறுபுறம் ரோகித் சர்மா வந்ததும் மொத்தமாக மாறியுள்ள இந்தியா முதல் போட்டியில் சீண்டியதால் இப்போட்டியில் இருமடங்கு திருப்பி அடிக்க காத்திருக்கும் இங்கிலாந்தை சமாளித்து 2 – 0* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இச்சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் முடிக்க போராடும் என்பதால் இப்போட்டியும் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று நம்பலாம். இப்போட்டியை முன்னிட்டு போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

கிரிக்கெட்டின் மெக்கா:
கடந்த 1814இல் அதாவது 200 வருடங்களுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு 1884 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. 1983இல் இந்தியா முதல் முறையாக வென்ற உலக கோப்பை உட்பட ஏராளமான சரித்திரம் வாய்ந்த போட்டிகளை நடத்திய மாபெரும் பெருமைக்கு சொந்தமான இந்த மைதானத்தில் கடந்த 1972 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. மொத்தம் 30,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 69 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 31 போட்டிகளில் வென்றுள்ளன, 33 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றன. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. 3 போட்டிகள் டையில் முடிந்தன.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் 57 போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து 25 வெற்றிகளையும் 27 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 3 போட்டிகள் டையில் முடிந்தது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

3. இங்கு வரலாற்றில் இங்கிலாந்தை 7 போட்டிகளில் சந்தித்துள்ள இந்தியா 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது, 1 போட்டி டையில் முடிந்தது.

- Advertisement -

புள்ளிவிவரம்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. சௌரவ் கங்குலி : 208
2. யுவராஜ் சிங் : 170
3. எம்எஸ் தோனி : 165

இந்த மைதானத்தில் இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் வரலாற்றில் சதமடித்தது கிடையாது. அதிகபட்ச ஸ்கோராக சௌரவ் கங்குலி 90 ரன்கள் எடுத்துள்ளார். கங்குலி, யுவராஜ், தோனி, டிராவிட் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 அரை சதங்கள் அடித்துள்ளனர்.

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் : ஆர்பி சிங் 5 விக்கெட்கள். இங்கு சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் மொஹிந்தர் அமர்நாத் : 3/12, 1983

இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 326/8, குறைந்தபட்ச ஸ்கோர் : 132/3

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் லண்டன் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு ஏதுமில்லை. இருப்பினும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:
ஓவல் மைதானத்தை போலவே லார்ட்ஸ் மைதானமும் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாகும். ஆனால் முதல் போட்டியை போலவே பவர்பிளே ஓவரில் மேகமூட்டத்தால் ஏற்படும் ஈரப்பதமான வானிலையை பயன்படுத்தி புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தலாம்.

இருப்பினும் இங்கு லேசான புற்கள் காணப்படும் என்பதால் சீரான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியன பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதத்தை கொடுக்கும். எனவே ஆரம்ப கட்ட ஓவர்களை நிதானமாக எதிர்கொண்டால் இங்கு பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுக்கலாம். மிடில் ஓவர்களில் திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 242 ஆகும்.

இதையும் படிங்க : IND vs ENG : மெகா வெற்றியால் பாகிஸ்தானை முந்திய இந்தியா, புதிய உச்சத்தை தொட்ட பும்ரா, சூர்யகுமார் – முழுவிவரம்

மேலும் இங்கு வரலாற்றில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன என்பதுடன் இது பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement