IND vs ENG : மெகா வெற்றியால் பாகிஸ்தானை முந்திய இந்தியா, புதிய உச்சத்தை தொட்ட பும்ரா, சூர்யகுமார் – முழுவிவரம்

Jasprit Bumrah SuryaKumar yadhav
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்ற இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் மட்டுமே செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 378 ரன்களை எளிதாக சேஸிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் ஜூலை 12-ஆம் தேதியான நேற்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்தியாவின் எரிமலையான பந்துவீச்சுக்கு பதில் சொல்லமுடியாமல் சீட்டுக்கட்டு சரிவது போல மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், மொய்ன் அலி என நட்சத்திர வீரர்கள் கொண்ட படையுடன் சொந்த மண்ணில் படுமோசமாக செயல்பட்டு அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

முந்திய இந்தியா:
அந்த அளவுக்கு அபாரமாக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 111 என்ற எளிதான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பிய ஷிகர் தவான் 31* (54) ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 76* (58) ரன்களும் எடுத்து 114/0 ரன்களை எட்ட வைத்து வெற்றி பெறச் செய்தனர். இதை தொடர்ந்து ஜூலை 15-ஆம் தேதியன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் சர்வதேசப் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா ஏற்கனவே 4-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 3 புள்ளிகளைப் பெற்று பரம எதிரியான பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் பரிதாபமாக தோற்றாலும் இங்கிலாந்து தொடர்ந்து 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் நியூஸிலாந்து 126 புள்ளிகளுடன் உள்ளது.

- Advertisement -

உச்சத்தில் பும்ரா:
அதேபோல் ஓவல் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 7 இடங்கள் முன்னேறி முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட்டை பின்னுக்கு தள்ளி 718 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் புதிய நம்பர் ஒன் பந்துவீச்சாளராக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய பவுலரும் டாப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை.

மேலும் பேட்ஸ்மேன்கள் பிரிவில் 76 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து 802 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறார். முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி தொடர்ந்து 803 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நீடிக்கிறார்.

- Advertisement -

டாப்பில் ஸ்கை:
அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் இங்கிலாந்தை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்து டி20 தொடரை வென்ற இந்தியா 114 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலிய 128 புள்ளிகளுடன் உள்ளது.

அதைவிட இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 216 என்ற கடினமான இலக்கைத் துரத்தும் போது இதர இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் வெற்றிக்காக தனி ஒருவனை போல அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்து 117 ரன்கள் குவித்து கடைசி வரை போராடிய சூர்யகுமார் யாதவ் டாப் 10 பட்டியலுக்கு நுழைந்துள்ளார்.

இதையும் படிங்க : எங்களுக்கு நாட்டை விட பணம் கிடைக்கும் டி20 தொடரே முக்கியம் – தென்ஆப்பிரிக்காவின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

அந்த போட்டிக்கு முன்பாக 49-வது இடத்தில் இருந்த அவர் ஒரே போட்டியில் 44 இடங்கள் ராக்கெட் போல முன்னேறி தற்போது 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய வீரர்களும் டாப்-10 பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல்-ரவுண்டர்கள் என எந்த பட்டியலிலும் இல்லை.

Advertisement