எங்களுக்கு நாட்டை விட பணம் கிடைக்கும் டி20 தொடரே முக்கியம் – தென்ஆப்பிரிக்காவின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை

rsa
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு டெஸ்ட் போட்டிகளாக ஆரம்ப கால கட்டங்களில் நிறைய விளையாடப்பட்டது. 5 நாட்கள் முடிந்தும் முடிவை கொடுக்காமல் டிராவில் முடிந்த அப்போட்டிகள் அலுப்பு தட்டும் வகையில் அமைந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக 60 ஓவர் போட்டிகளாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 50 ஓவர் போட்டிகளாக மாற்றப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் 90களில் மிகவும் பிரபலமடைந்தது. அதையும் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்ற வகையில் 3 – 4 மணி நேரத்திற்குள் முடிவைக் கொடுக்கும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2005இல் துவங்கப்பட்டு ஓவருக்கு ஓவர் எதிர்பாராத திருப்பங்களை கொடுப்பதால் இன்று ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நம்பர் ஒன் கிரிகெட்டாக வளர்ச்சி கண்டுள்ளது.

அதனால் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக வல்லுநர்கள் கருதும் நிலையில் டி20 போட்டிகளின் வெற்றியால் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 மற்றும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் பின்னுக்கு தள்ளி தரத்திலும் பணத்திலும் இன்று உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை பார்த்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உட்பட உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் ஆளாளுக்கு தங்களது நாட்டில் ஒரு டி20 தொடரை ஆரம்பித்தன.

- Advertisement -

ஆபத்தான டி20:
இருப்பினும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை எந்த நாடும் தொட முடியாத நிலைமையில் வரும் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் விரிவடைய உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச போட்டிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறைய வல்லுநர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரை காட்டிலும் முந்தியுள்ள தென் ஆப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டின் அழிவிற்கு முதல் விதையைப் போட்டுள்ளது. ஆம் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அங்கு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால் அதில் வரும் 2023இல் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பையில் விளையாடப்போகும் அணிகளை தீர்மானிக்கும் ஐசிசி ஒன்டே சூப்பர் லீக் தொடரின் ஒரு அங்கமாக வரும் 2023 ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுவதாக இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

பணமே முக்கியம்:
அந்த தேதிகளில் தங்களது நாட்டில் புதிதாக ஒரு உள்ளூர் பிரீமியர் லீக் டி20 தொடரை நடத்த திட்டமிட்டுள்ள அந்நாட்டு வாரியம் அதற்காக ஏற்கனவே முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று விட்டதால் அதற்கு விஸ்வாசமாக நடந்து கொள்ளும் வகையில் தங்களது நாட்டு வீரர்களை அந்த தொடரில் விளையாட அனுமதிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே ஒன்டே சூப்பர் லீக் தொடரில் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ள தென்னாப்பிரிக்கா 11-வது இடத்தில் திண்டாடி வருகிறது.

ஆனாலும் தங்களுக்கு டி20 தொடரும் பணமும் தான் முக்கியம் என முடிவெடுத்துள்ள தென்னாபிரிக்க வாரியம் அந்த ஒருநாள் தொடரை ரத்து செய்ய சம்மதம் தெரிவித்து அதற்கு வழங்கப்படும் 30 ஒன்டே சூப்பர் லீக் புள்ளிகளை ஆஸ்திரேலியாவுக்கு தாரைவார்க்க ஒப்புக்கொண்டுள்ளது. வரும் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் உலக கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக ரத்து செய்யப்பட்ட இந்த தொடரை நடத்துவதற்கான கால அவகாசம் இருநாட்டு வாரியங்களுமே கிடைக்கவில்லை என்பதால் வேறு வழியின்றி ஒரு படி கீழே வந்துள்ள தென்னாப்பிரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் அதிர்ச்சி:
இதை அதிகாரபூர்வமாக ஐசிசி ஏற்றுக்கொண்டதும் அந்த 30 புள்ளிகள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் ஒன்டே சூப்பர் லீக் தொடரில் எஞ்சியிருக்கும் தன்னுடைய 5 போட்டிகளில் வென்றாலும் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுவது 70% கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் டிசம்பர் 17, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வழக்கம்போல நடைபெறவுள்ளதாகவும் தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சச்சின் கங்குலியை தொடர்ந்து இந்திய ஓப்பனர்களாக தனித்துவமான சாதனையில் இணைந்த – ரோஹித் தவான் ஜோடி

இப்படி திடீரென ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது தங்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் நாட்டை விட டி20 கிரிக்கெட்டும் பணமும் தான் முக்கியம் என தடாலடியாக இறங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவின் இந்த முடிவு ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement