இந்தியா – வங்கதேசம் மோதும் புனே மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

MCA Cricket Stadium Ground Pune
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களின் முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அடுத்ததாக தங்களுடைய 4வது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

தங்களது முதல் 3 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள வங்கதேசம் சாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன், டஸ்கின் அகமது போன்ற தரமான வீரர்களுடன் இப்போட்டியில் வலுவான இந்தியாவை 2007 போல தோற்கடிக்கும் முனைப்புடன் எதிர்கொள்கிறது. மறுபுறம் ரோகித் முதல் பும்ரா வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தானையே தோற்கடித்த இந்தியா நிச்சயமாக வங்கதேசத்தையும் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி வெற்றி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

புனே மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புனே நகரில் நடைபெற உள்ளது. கடந்த 2012இல் தோற்றுவிக்கப்பட்டு 37,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் 2013 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் விளையாடி உள்ள இந்தியா 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இம்மைதானத்தில் முதல் முறையாக இப்போது தான் உலகக்கோப்பை போட்டியும் இந்தியா – வங்கதேசமும் மோதுகின்றன. இங்கு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (448), சதங்கள் (2) அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதே போல இங்கு அதிக விக்கெட்டுகளை (10) எடுத்த பவுலராக புவனேஸ்வர் குமாரும் சிறந்த பவுலிங்கை (4/35, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018) பதிவு செய்த பவுலராக ஜஸ்பிரித் பும்ராவும் திகழ்கின்றனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா 356/7, இங்கிலாந்துக்கு எதிராக, 2017.

வெதர் ரிப்போர்ட்:
புனே நகரில் அக்டோபர் 19ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் இந்திய வானிலை மையம் லேசான மேகமூட்டம் மட்டுமே காணப்படும் என்று அறிவித்துள்ளதால இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
புனே மைதானம் வரலாற்றில் பேட்டிங்கு சாதகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பவுண்டர்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி நன்கு செட்டிலானால் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதனாலேயே இங்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 307 ரன்களாக இருக்கிறது. அதே சமயம் இங்குள்ள பிட்ச்சில் கிடைக்கும் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: இந்தியா – வங்கதேச போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

மேலும் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் வழக்கமான ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். வரலாற்றில் இங்கு நடைபெற்ற 7 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 3 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement